கோவை: மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்துக்கு உள்பட்ட SIHS காலனியில் மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.
மக்கள் சபைக் கூட்டம்
மக்களின் குறைகளை நேரில் கேட்டு நிவர்த்தி செய்யும் விதமாக மக்கள் சபைக் கூட்டம் அக்.30 முதல் நவ. 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இந்நிகழ்ச்சியினைத் தொடங்கி வைத்தார்.
கோவை மாவட்டத்தில் மக்களின் குறைகளை நேரில் கேட்டு நிவர்த்தி செய்யும் விதமாக மக்கள் சபைக் கூட்டம் இன்று முதல் வரும் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உள்பட்ட SIHS காலனியில், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இந்நிகழ்ச்சியினைத் தொடங்கி வைத்தார்.
இலவச மக்கள்சேவை மையம்
அதன்படி, முதற்கட்டமாக ஆறு வார்டுகள் சென்று குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, நாளை (நவ.01) கோவை மாநகராட்சியில் 17 வார்டுகளில் மக்கள் சபைக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்.
கோவை மாநகராட்சி, மாவட்டத்தின் 37 பேரூராட்சி, மூன்று நகராட்சி உள்பட அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் சபைக் கூட்டங்களானது அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெறவிருக்கிறது. மேலும், மிக விரைவில் மாநகராட்சியில் 25 இடங்களில் இலவச சேவையாக மக்கள் சேவை மையங்கள் தொடங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நவ.21ஆம் தேதி வரை மனுக்களை மக்கள் சபைக் கூட்டத்தில் வழங்கலாம் என்றார். கோரிக்கைகள் மீது மிக விரைவாக நடவடிக்கைகள் எடுத்து அரசாணைகள் வழங்கப்படும் என்றும் கூறினார். கோவை மாநகராட்சியில் 15,38,000 என்ற எண்ணிக்கையில் மக்கள் தொகை இருக்கும் நிலையில், ஒன்பது நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகின்றது.
முதலமைச்சருடன் ஆலோசனை
இரண்டு நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கும் வகையில் சிறப்பு நிதி பெற்று, மாநகராட்சி முழுவதும் விநியோகம் செய்யப்படும். மேலும், குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஆகும் செலவுகளை மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது.
உயர்மின் கோபுரங்களை விவசாய நிலங்களில் அமைப்பது தொடர்பாக, ஓரே மாதிரியாக இழப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். குறிப்பாக, கோவை விமான நிலைய விரிவாக்கத்தால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பான மனுக்கள் குறித்து, முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தீபாவளி பண்டிகைக்கு 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!