கோவையின் ராமநாதபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடக்கி வைத்தார். இதில் காலை உணவாக கேசரி, ரவா உப்புமா, சாம்பார் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் அதிகாரிகள் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை உட்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், 'முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் இன்று கோவையில் தொடங்கப்பட்டது. வீட்டில் சாப்பிடுவதைப் போல இருக்கின்றது என குழந்தைகள் சந்தோசப்படுகின்றனர்.
தொடர்ந்து, கடந்த ஆட்சியில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படவில்லை என்பது முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சாலைப் பணிகளுக்காக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 125 சாலைகளுக்கு 26 கோடி நிதி ஒதுக்கீடு முதற்கட்டமாக செய்யப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் 200 கோடி ரூபாய் நிதி முழுமையாக பெறப்படும்.
கோவை மாநகரில் பாதாளச் சாக்கடைக்கு விடுபட்ட பகுதிகளுக்கு 177 கோடி ரூபாய்க்கு அரசாணை வழங்கப்பட்டுள்ளது. மின் கட்டண மாற்றத்தின் விளக்கம் தெளிவான ஒப்பீடுகளுடன் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய மின்கட்டணம், 2017ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஏற்றப்பட்ட மின்கட்டணம், 2022 மாற்றி அமைக்கப்பட்ட கட்டணம் ஆகிய ஒப்பீடுகளுடன் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதைப் படித்து பார்த்தாலே விளங்கும். அதிமுக ஆட்சியில் 64 முதல் 138 விழுக்காடு வரை கட்டணம் உயர்த்தி இருக்கிறார்கள்.
2.37 கோடி மின் நுகர்வோரில் ஒரு கோடி மின்நுகர்வோருக்கு எந்தக் கட்டணமும் இல்லை. 63.35 லட்சம் மின் நுகர்வோருக்கு இரண்டு மாதங்களுக்கு 55 ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் மின் கட்டணம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சிறு குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு உயர்த்த திட்டமிடப்பட்ட கட்டணம் 3,217 கோடி ரூபாயினை குறைத்து அரசு நிர்ணயம் செய்து நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. சிறு,குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் குறைவான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
HT தொழிற்சாலைகளுக்கும் பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழ்நாட்டில் குறைந்த கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மின் கட்டணத்திற்காக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடியவர்கள் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ள கட்டண விவரங்களை பார்த்தாலே தெரிந்து கொள்ள முடியும்.
சில நேரங்களில் மின் கட்டணம் அரசியல் ஆக்கப்படுகிறது. விசைத்தறிகளுக்கு இந்தியாவிலேயே குறைந்த கட்டணம் தமிழ்நாட்டில் தான் விதிக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் விசைத்தறிகளுக்கு HT கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் விசைத்தறிகளுக்கு அந்த கட்டணம் இல்லை' எனத் தெரிவித்தார்.
'கடந்த அதிமுக ஆட்சியில் விசைத்தறிகளுக்கு எவ்வளவு கட்டணம் உயர்த்தினார்கள், இப்பொழுது எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். 70 பைசா மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே விசைத்தறிகளுக்குக் குறைந்த கட்டணம் தமிழ்நாட்டில் உள்ள விசைத்தறிகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இழுத்து மூட வேண்டிய நிலையிலிருந்த மின் வாரியத்திற்கு அரசு மானியம் வழங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. 25 விழுக்காடு மட்டுமே மின் உற்பத்தி தமிழ்நாட்டில் செய்கிறோம். மற்றவற்றை வெளியிலிருந்து தான் வாங்குகின்றோம்.
2006-11 ஆட்சியில் திட்டமிடப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் மாதம் 800 மெகா வாட் மின் உற்பத்தி திட்டம் செயல்பாட்டுக்கு வரும். மின் கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 316 துணை மின் நிலையங்கள் டெண்டர் நிலைக்கு வந்துள்ளன” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்