கோவை மாவட்டம் சுண்டக்காமுத்தூர் பகுதியில் 20 நடமாடும் கரோனா பரிசோதனை மாதிரிகள் சேகரிக்கும் வாகனங்கள் மற்றும் 10 எல்.இ.டி வாகனங்களையும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, "முதலமைச்சரின் ராசியால் தமிழ்நாடு முழுவதும் குளங்கள் நிரம்பி உள்ளன. கோவையில் உள்ள குளங்கள், டேம்கள் அனைத்தும் நிரம்பி உள்ளன. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் கரோனா பரிசோதனை அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவையில் ஒரு நாளைக்கு சுமார் 7 ஆயிரம் நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
நடமாடும் வாகனங்கள் மூலம் கரோனா வைரஸ் தொற்று பரவலைக் குறைக்க முடியும். இந்த வாகனத்தில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் பணியாற்றுவர். மேலும் போதிய அளவிற்கு மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்டிருக்கும். கோவையில் 10 ஆயிரத்து 810 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, 11 லட்சத்து 63 ஆயிரத்து 212 நபர்களுக்கு காய்ச்சல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொடிசியாவில் 712 பேர் சித்த மருத்துவம் மூலம் கரோனா சிகிச்சை எடுத்து கொள்கின்றனர். மேலும் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் முகக்கவசங்கள் அணிய வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: விருதுநகரில் நடைமுறைக்கு வந்த நடமாடும் நுண்கதிர்வீச்சு வாகனம்!