கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சையத் முக்தார் அகமத்(35) திருமணமான இவர் படிப்பை முடித்துவிட்டு கௌரவமான அரசாங்க வேலையை தேடிச்செல்லும் பல பட்டதாரிகளுக்கு மத்தியில் துப்பரவு தொழிலும் அரசு வேலை என்றும் செய்து வருகிறார்.
கடந்த ஆறாம் தேதி அமைச்சர் முன்னிலையில் பல்வேறு துப்புரவு தொழிலாளர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டதில் தேர்வான இவர் படிக்காதவர்கள் செய்யும் வேலையாக பார்க்கும் பலரின் மத்தியில் படித்திருந்தாலும், படிக்காவிட்டாலும் இந்த பணியும் மகத்தான ஒன்று என்று அனைவருக்கும் உணர்த்தும் வகையில் எம்.பி.ஏ. முடித்துவிட்டு இந்தத் தொழிலை செய்து வருகிறார்.
காலை 5 மணிக்கு தொடங்கும் இவரது இந்த மகத்தான வேலை அன்று மாலை வரை தொடர்கிறது. வீட்டில் பல எதிர்ப்புகள் வந்தாலும் அதையும் தாண்டி இந்த வேலையை புனிதமாகக் கருதி செய்து வருகிறார்.
மேலும் அவர் தனக்கு தெரிந்த, தான் படித்த சில பாதுகாப்பு முறைகளையும் அவருடன் வேலை செய்பவர்களுக்கு கற்றுத்தருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் துப்புரவுத்தொழில் மிகவும் மகத்தான ஒன்று. மருத்துவ துறைக்கு நிகரான பணி என்றும் தெரிவித்தார்.
தற்பொழுதுள்ள இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு கௌரவமான அரசு வேலையை தேடிக்கொண்டே இருப்பதைவிட இதில் சேர்ந்து பணியாற்றினால் இதன் மூலம் தங்களது திறமைகளைக்கொண்டு மேலே முன்னேற முடியும் என்றும் தெரிவித்தார்.
இந்த பணியில், தான் சேரும்பொழுது வீட்டில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது அவர்களை சமாதானப்படுத்தி இந்த பணியை செய்து வருவதாக கூறும் அவர், அவருடன் வேலை செய்பவர்களும் எந்த ஒரு பாரபட்சமும் பார்க்காமல் தனக்கு மிகவும் உறுதுணையாக இருப்பதாகவும் மகிழ்ச்சியடைகிறார்.