கோவை தேர் நிலை திடலில் மதசார்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உரையாற்றினார்.
10 ஆண்டுகளுக்கு முன்பே செய்து காட்டிவிட்டோம்
அப்போது பேசிய அவர், "இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் விலைவாசியை குறைக்கிறோம் என்று அவர்கள் கூறுவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் அதை நாங்கள் பத்து ஆண்டுகளுக்கு முன்பே செய்து காட்டிவிட்டோம். அன்றைய தினம் வரலாறு காணாத வகையில் கச்சா எண்ணெய் விலை இருந்தது. அதை மன்மோகன் சிங் கட்டுப்படுத்தி 70 ரூபாய்க்கு விற்பனை செய்தார். 420 ரூபாய்க்கு கேஸ் விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் இன்று கச்சா எண்ணெய் விலை உலக அளவில் சரிபாதி குறைந்துள்ளது. அப்படியென்றால் மோடி பெட்ரோல், கேஸ் விலையை குறைத்திருக்க வேண்டும். பண மதிப்பிழப்புதான் இவர்களுக்கு தெரிந்த அரசியல். 500,1000 ரூபாய் செல்லாது என்று கூறியதற்கு இன்னும் அவர்கள் விளக்கமளிக்கவில்லை. அதில் பெரிதும் பாதிக்கப்பட்டது கோவை, திருப்பூர் போன்ற நகரங்கள்தான்.
வெறுப்பின் மூலமாக யாரும் வென்றது இல்லை
மாநில முதலமைச்சர் ஒருவர் தேர்தல் பரப்புரைக்காக வரும்போது எதற்காக கடைகளை அடைக்க வேண்டும்?. உலகில் வன்முறை, வெறுப்பின் மூலமாக யாரும் வென்றது இல்லை. பாஜக அனைத்து இடங்களிலும் வெறுப்பை தூண்டுகிறார்கள் என்று ராகுல் கூறுகிறார். அன்று மகாத்மா காந்தி வென்றதற்கும் ஆர்எஸ்எஸ் தோற்றதற்கும் காரணம் மகாத்மா அன்பை விதைத்தார். ஆர்எஸ்எஸ் வெறுப்பை விதைத்தார்கள். அதை தொடர்ந்து 70 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தவறான பாதையில் பாஜக பயணிக்கிறது.
பிரதமர் பேசியது எனக்கு வருத்தமளிக்கிறது
தாராபுரத்தில் பிரதமர் பேசும்போது மேடை பேச்சாளர்போல் பேசியுள்ளார். அவ்வாறு பேசக்கூடாது. திமுக, காங்கிரஸ் பெண்களை இழிவாக பேசியதாக பிரதமர் கூறியிருக்கிறார். அது எனக்கு வருத்தமளிக்கிறது. யாரோ ஒருவர் பேசியதை பிரதமர் மேற்கோள் காட்டி பேசியது ஏற்புடையதல்ல. அது தவறு. இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு மேலாக வேறு யாரும் பெண்களுக்கு வாய்பளித்ததில்லை. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என்ற சட்டம் கொண்டு வந்தவர் கருணாநிதிதான். இதைவிட நீங்கள் வேறு எதை எதிர்ப்பார்க்கிறீர்கள். எனவே அனைவரும் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்து வெற்றியை ஈட்டி தரவேண்டும்" என்று தெரிவித்தார்.