தமிழ்நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக கடும் வறட்சி நிலவியது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த சாடிவயல் பகுதியில் உள்ள கோவை குற்றால அருவியில் நீர் வரத்து மிகவும் குறைந்தது.
இதனையடுத்து, சுற்றுலா பயணிகள் கோவை குற்றால அருவிக்குச் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். குறைவான நீர் வருவதால் வனவிலங்குகள் நீரை தேடி அருவிக்கு வரும் என்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் கோவை குற்றாலத்திற்கு வர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையே, கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக சிறுவாணி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் கோவை குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதை முன்னிட்டு, நேற்று முதல் கோவை குற்றால அருவிக்கு அனுமதி வழங்கப்பட்டதோடு, சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பல்வேறு பராமரிப்பு, அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது என மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்தார். இதனையடுத்து, இன்று கோவை மட்டுமின்றி நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கோவை குற்றால அருவிக்கு தற்போது படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.