சென்னை: சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் “சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு” என்ற தலைப்பில் கலைத் திருவிழா (2024 - 2025) நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மாவட்டவாரியாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களை வைத்து, நிறைவாக மாநில அளவிலான கலையரசன் - கலையரசி விருதுக்கான போட்டி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்திநராக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற 20 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலையரசன், கலையரசி விருதுகளை வழங்கினார். இந்த போட்டியில் பங்கு பெற்ற 466 மாணவ, மாணவிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டன. மேலும், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அப்போது மேடையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “பள்ளி மாணவர்களுக்கான இந்த கலை திருவிழாவை முதலமைச்சர் தொடங்கி வைத்து மூன்று ஆண்டுகளாகிறது. இதுவரை இந்த கலை திருவிழா போட்டி ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை நடத்தப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் நடத்தப்பட்டுள்ளது.
“கல்விச் செல்வம் காலத்தால் அழியாதது. அந்தச் செல்வம் காட்டிலோ, சுரங்கத்திலோ யாரும் பயன்படுத்த முடியாதவாறு ஒளிந்திருக்கக் கூடாது. அதை எடுத்துப் பயன்படுத்தி பளப்பளப்புள்ள நல்ல ஒளியுள்ள தங்கமாக மாற்ற வேண்டும்” என்று வலியுறுத்திய பேரறிஞர் அண்ணாவின் பெயரில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு… pic.twitter.com/G0xm8B3IYS
— Anbil Mahesh (@Anbil_Mahesh) January 24, 2025
நமது மாணவர்களின் திறமையை இந்தியா முழுவதும் இந்த நிகழ்ச்சி மூலம் எடுத்து செல்ல வேண்டும். மத்திய அரசிடம் எங்களுக்கு தர வேண்டிய நிதி தாருங்கள் என கேட்க வேண்டும். இந்த நிகழ்ச்சிகளை மத்திய அரசு நிதியுடன் நடத்தப்பட வேண்டும். ஆனால், இந்த நிகழ்ச்சியை மாநில அரசு முழுமையாக எடுத்து நடத்தி வருகிறது. மாணவர்கள் தங்களது திறமையை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு எத்தனை பெயர்கள் இருந்தாலும் அவரை கலைஞர் என்று தான் உலகம் அழைக்கிறது. எனவே கலை திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்" என்றார்.
இதையும் படிங்க: காரைக்குடி அருகே பள்ளியில் மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!
அதனைத் தொடர்ந்து, பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திக் காட்டிய பள்ளி குழந்தைகளுக்கு பாராட்டுகள். விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடும் வகையில் அருமையாக இந்த கலைத் திருவிழா நடத்தப்பட்டது. ஆசிரியர்கள், பெரியவர்கள் தான் குழந்தைகளுக்கு அறிவுரை வழங்குவார்கள். ஆனால், இன்று பெரியவர்களுக்கு குழந்தைகளாகிய நீங்கள் மிகப் பெரிய அறிவுரையை இந்த நிகழ்ச்சி மூலம் வழங்கியுள்ளீர்கள். குறிப்பாக சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து எங்களுக்கு கட்டளையிட்டு இருக்கிறீர்கள்.
இந்திய அளவில் தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வியில் மட்டும் அல்ல கலையிலும் திறமையானவர்கள் என நிரூபித்து காட்டி வருகிறார்கள். 46 லட்சம் மாணவர்கள் இந்த கலைத் திருவிழாவில் கலந்துக் கொண்டு தங்களின் திறமைகளை வெளிபடுத்தியுள்ளார்கள். தேர்வு செய்யப்பட்ட 13,000 பேரில் வெற்றி பெற்ற 20 மாணவர்கள் இங்கு வந்துள்ளீர்கள். உங்கள் முகங்களை பார்க்கும் பொழுது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முகத்தினை பார்க்கிறேன்.
கருணாநிதி பற்றி உங்களுக்கு தெரியும். கருணாநிதி என்னும் அவர் பல துறைகளில் முத்திரை பதித்ததால் கலைஞர் என்ற பெயர் வந்தது. அந்த பெயர்தான் அவருக்கு நிலைத்து நிற்கிறது. மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டியின் வெற்றியாளர்கள் தற்போது இந்தியளவில் பாடகராக, நடன கலைஞராக, சிறப்பாக செயலாற்றி வருகின்றனர்.
உங்களின் வளர்ச்சிக்காக உலகின் எந்த மூலைக்கும், எந்த உயரத்திற்கும் கூட்டிச் செல்வதற்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும். பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு என் சார்பில் ஒரு கோரிக்கை, மாணவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள உடற்கல்வி வகுப்பு நேரத்தில், அவர்களை தயவு கூர்ந்து கடன் வாங்காமல் விளையாடவிடுங்கள்.
நன்றாக விளையாடக்கூடிய பிள்ளைகள் தான் நன்றாக படிப்பார்கள் என அறிவியல் கூறுகிறது. குறிப்பாக நீங்கள் நடத்தக் கூடிய கணிதம், அறிவியல் வகுப்பினை விளையாட்டு நேரத்திற்கு கடனாக கொடுத்தால் மாணவர்கள் மேலும் வளர்ச்சி அடைவார்கள். இந்த கோரிக்கையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பரிசீலனை செய்வார் என எண்ணுகிறேன். உங்களிடமிருந்து எது வேண்டுமானாலும் பறித்துக் கொள்ளலாம். ஆனால் கல்வியை மட்டும் ஒரு பொழுதும் பறித்துக் கொள்ள முடியாது என முதலமைச்சர் கூறியதைப் போல அனைவரும் நன்றாக படியுங்கள்" எனத் தெரிவித்தார்.