கோயம்புத்தூர்: கோவை மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் இரவு நேரங்களில் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்புகளுக்குள் சென்று, மனித - யானை மோதல் போன்ற சம்பவங்கள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது.
யானை தாக்கி ஒருவர் பலி:
இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜன.23) கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட தாளியூர் பகுதியைச் சேர்ந்த நடராஜ் (69) என்பவர் அதிகாலையில் நடைபயிற்சிக்கு சென்ற போது, ஒற்றை ஆண் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். அதனால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திலிருந்து வந்த நிலையில், காட்டு யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்தவரின் உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களைப் பாதுகாக்க வேண்டி போராட்டம்:
அப்போது வனத்துறையினர் காட்டு யானையை விரட்ட கும்கி யானைகள் அழைத்து வரப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தைத் தொடர்ந்து காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதைத் தடுக்க கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வனவர் தலைமையில் மற்ற வனச்சரக பணியாளர்கள் மற்றும் யானை விரட்டும் காவலர்களை கொண்ட இரண்டு கூடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டது.
முத்து (என்ற) கும்கி யானை வருகை:
மேலும் காட்டு யானைகளை விரட்ட முதற்கட்டமாக டாப்சிலிப் யானைகள் முகாமிலிருந்து முத்து என்ற கும்கி யானை தாளியூர் பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. லாரி மூலம் தாளியூர் பகுதிக்கு அழைத்து வரப்பட்ட கும்கி யானை முத்து, அதிகப்படியான மனித - வனவிலங்கு மோதல் நடைபெறும் சின்ன மலைப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வேங்கைவயல் விவகாரம்: "குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கமா?" - சிபிஐயிடம் வழக்கை ஒப்படைக்க திருமாவளவன் வலியுறுத்தல்!
கும்கிக்கு பயந்து காட்டு யானை வராது:
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “கும்கி யானையின் வாசம் காரணமாக, காட்டு யானைகள் இப்பகுதிக்கு வர வாய்ப்பு இல்லை. காலை மற்றும் மாலை நேரங்களில் கும்கி யானையை வனப்பணியாளர்கள் ரோந்து அழைத்துச் செல்வார்கள். ஒருவேளை காட்டு யானை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்தால் கும்கி யானையை வைத்து விரட்டும் பணிகள் தொடங்குவோம்.
எனவே மக்கள் கவலை கொள்ள வேண்டாம். காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதைத் தடுக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும். குளிர் காலத்தில் காட்டு யானைகள் அதிகமாக வெளியே வருகின்றன. யானை நடமாட்டம் உள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே நடமாட வேண்டாம்.
வனத்துறையினர் வேண்டுகோள்:
அதிகாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என ஏற்கனவே வனத்துறை சார்பில் கிராம மக்களிடம் அறிவுறுத்தியுள்ளோம். இதனை மீறி சிலர் அதிகாலை நேரங்களில் நடைப்பயிற்சி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், வனத்துறையினர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எந்த பலனும் இல்லாமல் ஆகிவிடுகிறது. அதனால், அசம்பாவிதங்கள் ஏற்படும் வாய்ப்பும் உருவாகிறது. எனவே, இரவு நேரங்களில் பொதுமக்கள் தனியாக வெளியே நடமாடுவதை முற்றிலும் தவிர்த்து வனத்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.