கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளாராக மக்கள் நீதி மய்யம் சார்பில் மகேந்திரன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு அளித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சிங்காநல்லூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் பரப்பரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "எங்கள் கட்சி வேட்பாளார்களில் யாரும் தவறு செய்து விட்டு சிறைச்சாலைக்கு சென்றதில்லை. அவர்கள் அனைவரும் மக்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் சேவை செய்தவர்கள். சக வேட்பாளர்கள் என்னை வெளியூர்காரர்கள் என்கிறார்கள்.
கோவையில் எனக்கு ஒரு வாடகை வீடு அல்லது சொந்தமாக வீடு பாருங்கள். நான் இங்குதான் வந்து வசிக்கப் போகிறேன். என்னை விமர்சிப்பவர் கூட மயிலாப்பூரைச் சேர்ந்தவர்தான். எனது எஞ்சிய வாழ்க்கை உங்களுக்காகத்தான். எங்களைப் பார்த்து மற்றவர்களுக்கு தொடை நடுங்க ஆரம்பித்துவிட்டது. மற்றவர்கள் ஒரு நாள் மீன் குழம்பு சாப்பிட ஆசை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் நான் வாழ்நாள் முழுவதும் சாப்பிட வசதியாக வயல் எங்கே இருக்கின்றது என்று காட்டுகிறேன்.
குடிகாரர்களும் என் சகோதரர்கள் தான். குடிகாரர்கள் ஓட்டும் நமக்கு வேண்டும். குடிப்பழக்கம் என்பது வியாதி. அதனை குணப்படுத்த தமிழ்நாட்டில் பாதி டாஸ்மாக் கடைகளை எடுத்து விட்டு அந்த இடங்களில் மனோதத்துவ மருத்துவர்கள் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். டாஸ்மாக் குறித்து பேசினால் ஓட்டு குறையும் என்கின்றனர். அதில் குறையும் ஓட்டு தாய்மார்களால் கூடும். கோவை என்பது உங்கள் ஊரோ எனது ஊரோ அல்ல. இது நமது ஊர். இதற்கு மேல் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை" என்று தெரிவித்தார்.