கோவை மாவட்டத்தில் ஜூலை 25ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 25ஆம் தேதிவரை பால் புதுமையினரின் உரிமைகளுக்கான நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பில் திருநங்கை கல்கி சுப்ரமணியம் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ஆகஸ்ட் 24ஆம் தேதி மாலை பிரமாண்ட வானவில் சுயமரியாதை பேரணி நடைபெறுகிறது. இதில் ஒரு பால் ஈர்ப்பு கொண்டோர், இரு பால் ஈர்ப்பு கொண்டோர், திருநங்கைகள், திருநம்பிகள், மகிழ்வன், மகிழ்வி என ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். எங்களின் கோரிக்கைகளை அரசிடம் கொண்டு செல்வதற்காக இந்த பேரணி நடத்தப்படுகிறது என்றார்.
மேலும் பேசிய அவர், ஒரு பால் ஈர்ப்பு தவறல்ல என நீதிமன்றம் தெரிவித்த பின்னரும், அவர்களின் காதல் தொடர்ந்து சிறுமைப்படுத்தப்படுகிறது. மூன்றாம் பாலினம் தொடர்பாக மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா எங்களுக்கு திருப்தியாக இல்லை. அந்த மசோதாவில் செய்ய வேண்டிய மாற்றங்களை சுயமரியாதை பேரணியில் வலியுறுத்துவோம் எனவும் கூறினார்.
அதேபோல், பெண்ணிற்கு வன்கொடுமை நடக்கும்போது வன்புணர்வில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டணை வழங்கப்படுவதை போல மூன்றாம் பாலினத்தவர்களை வன்கொடுமை செய்யும்போதும் தண்டணை கடுமையாக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.