கோவை மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம் தண்டபாணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவருக்குக் கடந்த சில தினங்களுக்கு முன் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டத்தையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து முரளியின் வீடு சுகாதாரத்துறையினரால் தனிமைப்படுத்தப்பட்டது. வீட்டின் முன்பகுதியில், கம்புகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. இவரது வீட்டின் மாடியில் குடி இருந்த வழக்கறிஞர் கீர்த்திவாசன் என்பவர் வெளியூர் சென்றுவிட்டார்.
இந்நிலையில் சிகிச்சை முடிந்து கடந்த 16ஆம் தேதி வீடு திரும்பிய முரளி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த உடைமைகள் கலைக்கப்பட்டு, லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளி மற்றும் 2,300 ரூபாய் பணம் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக முரளி அளித்த புகாரின் அடிப்படையில் பந்தயச் சாலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்கள் தேடிவருகின்றனர். கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வீட்டிலிருந்து நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சாலையில் உறங்கியவர் மீது கல்லை போட்டு கொலைசெய்த கொடூரம்!