கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த முத்தூட் மினி பைனான்ஸ் நிறுவனத்தில் ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்கள் நகைகளை அடகு வைத்துள்ளனர். கடந்த சனிக்கிழமை மாலையில் போத்தனூரைச் சேர்ந்த ரேணுகா தேவி மற்றும் திவ்யா என்ற இரண்டு பெண் ஊழியர்கள் பணியில் இருந்துள்ளனர்.
அப்போது முகமூடி அணிந்த நபர் ஒருவர், அந்த நிறுவனத்திற்குள் நுழைந்து பெண் ஊழியர்கள் இருவரையும் தாக்கி நகை பெட்டகத்தில் வைக்கப்பட்டு இருந்த 803 சவரன் நகை மற்றும் ஒரு லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் முத்தூட் நிறுவனம் மற்றும் கீழே இருந்த அரிசி கடை ஆகிய இடங்களில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்தனர். அதில் முகமூடி அணிந்த நபர் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. பின்னர் அந்த காட்சிகளைக் கொண்டு வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியைத் தேடிவந்தனர்.
இதனிடையே, கடை ஊழியர் ரேனுகா தேவியின் காதலனான சுரேஷ் என்பவர் தான் கொள்ளையில் ஈடுபட்டது என்பது காவல்துறை விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. அதனடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் சுரேஷை கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட 803 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை கைப்பற்றினர். மேலும், அந்த நபருக்கு சொந்த ஊர் சத்தியமங்கலம் என்றும், தற்போது கோவையில் உள்ள கெம்பட்டி காலணி பகுதியில் அவர் வேலை ஏதும் இல்லாமல் வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது.