கோயம்புத்தூர்: கடந்த டிசம்பர் 11ஆம் தேதி கோயம்புத்தூரைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் காணவில்லையென சிறுமியின் தாயார், அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார்.
சிறுமியை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் சிறுமியின் தாயார், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில், அச்சிறுமியின் வீட்டிற்கு அருகேயுள்ள முட்புதரில் துர்நாற்றம் வீசுவதாக தூய்மைப் பணியாளர்களுக்கு அப்பகுதி மக்கள் தகவலளித்தனர்.
குடும்ப நண்பர் கைது
இதனையடுத்து, தூய்மைப் பணியாளர்கள் அங்கு சென்று பார்த்தபோது, காணாமல் போன சிறுமியின் உடல் இருப்பது கண்டறியப்பட்டது. சிறுமியின் உடலை மீட்ட காவல் துறையினர் உடற்கூராய்விற்கு அனுப்பிவைத்தனர்.
சிறுமியை கொலை செய்தது யார் எனக் காவல் துறையினர் விசாரணை செய்ததில், சிறுமியின் குடும்ப நண்பரான முத்துக்குமார் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணையில், முத்துக்குமாருக்கும், சிறுமியின் தாயாருக்கும் நகை, பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருப்பது தெரியவந்துள்ளது.
நகை, பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாததால், சிறுமியை முத்துக்குமார் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளதை காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.
குண்டர் தடுப்புக் காவல்
இதையடுத்து முத்துக்குமார் மீது ஆதாயக்கொலை உள்ளிட்ட மூன்று பிரிவுகளிலும், போக்சோ சட்டத்தின் கீழும், குண்டர் தடுப்புக் காவலில் அடைக்க கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். இதற்கான உத்தரவினை மத்திய சிறையில் உள்ள முத்துக்குமாரிடம் காவல் துறையினர் வழங்கினர்.
இதையும் படிங்க: Suicide Prevention: அதிகரித்துவரும் தற்கொலைகளைத் தடுப்பது எப்படி?