கோயம்புத்தூர்: கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது மகளைப் பார்க்க பொள்ளாச்சிக்குச் சென்றுள்ளார். அப்போது அவர், பேருந்தை விட்டு இறங்கி அங்குள்ள திரையரங்கு அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது சாலையின் ஓரத்தில் துப்பாக்கி ஒன்றும் இரு கை உறைகளும் கிடந்துள்ளன. இதனைக் கண்ட மூதாட்டி அதனை எடுத்து மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
அந்தக் கைத்துப்பாக்கி உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ரகமாகும். அதில் தோட்டாக்கள் எதுவும் இல்லை எனத் தெரிகிறது. இது தொடர்பாக காவல் துணைக் கண்காணிப்பாளர் தமிழ்மணி தலைமையில் தனிப்படை காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
பொள்ளாச்சிக்கு கூலிப்படையினர் யாரேனும் வந்துள்ளார்களா? கொள்ளையர்கள் யாரேனும் இதனை விட்டுச் சென்றனரா? கொலைசெய்யும் நோக்கில் யாரேனும் வந்துள்ளார்களா எனப் பல்வேறு கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இது குறித்து துணைக் கண்காணிப்பாளர் தமிழ்மணி கூறுகையில், "துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட பகுதியிலிருந்து கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்துவருகிறோம். முக்கியமான சாலைகளில் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குடியிருப்புக்குள் புகுந்து திடுட்டு: திருடர்களை விரட்டிப் பிடித்த மக்கள்