கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் யூ.எம்.டி.ராஜா. பொற்கொல்லரான இவர், மி.கி. அளவு தங்கத்தில் சிற்பங்கள் செய்து அசத்திவருகிறார். அதேபோல, கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பொற்கொல்லர்களுக்கு அரசு உதவிடும் வகையில் 250 மி.கி. தங்கத்தில் பொங்கலுக்கான சிற்பங்களை வடிவமைத்துள்ளார்.
அதில் பொங்கல் பானை, கரும்பு, தென்னை மரம், காளைமாடு, நெற்கதிர் ஆகியவை மிகச் சிறிய அளவில், தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ராஜா கூறுகையில், "ஊரடங்கு காரணமாக பொற்கொல்லர்களின் நிலை மிகவும் மோசமாகவிட்டது. ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின் பிற தொழில்கள் மீண்டு வந்தும், பொற்கொல்லர்கள் அதே நிலையில்தான் உள்ளனர்.
இதுவரை எங்களுக்கு அரசு நிவாரணம் வழங்கவில்லை. பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று பழமொழி உண்டு. அதனை மனதில் வைத்துக்கொண்டு, இவற்றை வடிவமைத்துள்ளேன். எனவே அரசு எங்களுக்கு உதவ முன்வரவேண்டும்" எனத் தெரிவித்தார். மேலும் அவர், இவற்றை உருவாக்க இரண்டு நாள்கள் கடுமையாக உழைத்து, நுட்பமாக செயல்பட்டதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: தங்கம் விலை சவரனுக்கு ரூ.408 குறைவு!