கோயம்புத்தூர்: கோவை ஆவாரம்பாளையத்தில் தேசியமயமாக்கப்பட்ட (Central Bank of India) சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் கிளை அலுவலகத்தில் கார்த்திக்(35) என்பவர் நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றி வருகிறார்.
அங்கு கணேசன் என்பவர், தான் அடகு வைத்த நகைகளை திரும்ப எடுக்க சென்றுள்ளார். அப்போது, வங்கி ஊழியர்கள் பாதுகாப்பு அறையிலிருந்து அடகு நகைகளை எடுத்து வந்தபோது அவை போலி நகைகள் என்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் மற்ற நகைகளையும் சோதனை செய்தனர்.
சோதனை செய்ததில், 3 ஆயிரத்து 819 கிராம் நகைகள் போலியாக மாற்றி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நகைகளின் மதிப்பு ரூ.71 லட்சம் ஆகும்.
இந்த நகைகள் அனைத்தையும் மதிப்பீடு செய்தது கார்த்திக் என்பதும், அவர் அசல் நகைகளுக்குப் பதிலாக போலி நகைகளை மாற்றி வைத்ததும் தெரியவந்தது. பின்னர், இது தொடர்பாக வங்கியின் மேலாளர் ஜெய்ராம், கோவை மாநகர குற்றப்பிரிவு காவல்துறையில் புகாரளித்தார்.
நகை மதிப்பீட்டாளர் கைது
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மோசடியில் ஈடுபட்ட வங்கி நகை மதிப்பீட்டாளர் கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: உக்ரைன் போருக்கு நடுவே பாசப்போர் நடத்தி செல்ல நாயுடன் நாடு திரும்பிய மாணவி!