கோயம்புத்தூர்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை ஒட்டி சிறுமுகை வனப்பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் யானைகள், புலிகள், சிறுத்தைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில் சிறுமுகை வனச்சரகம் பெத்திகுட்டை கூத்தாமுண்டி வனச்சரகத்தில் சிறுமுகை வனத் துறையினர் வழக்கமான ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அழுகிய நிலையில் புலி ஒன்று இறந்து கிடந்ததைக் கண்டனர். பின்னர், இது குறித்து உயர் அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் தலைமையிலான வனத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். அதில் உயிரிழந்தது ஆண் புலி என்பதும், வயது முதிர்வு காரணமாக இறந்திருக்கலாம் எனவும் தெரியவந்தது.
புலி இறந்ததற்கான காரணம்
இதனையடுத்து இறந்த புலியின் உடலை தேசிய புலிகள் பாதுகாப்பு குழும (NTCA) விதிமுறைகளின்படி உடற்கூராய்வு செய்யப்பட்டது.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் கூறுகையில், 'புலி இறந்து சில நாள்கள் ஆகியிருக்கலாம். உடல் அழுகிய நிலையில் இருப்பதால், சில பாகங்கள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து புலி இறந்ததற்கான காரணம் தெரியவரும்’ எனத் தெரிவித்தார்.
![அழுகிய நிலையில் கிடந்த ஆண் புலி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13127628_sa.jpg)
கடந்த ஒரு மாத காலமாக கோயம்புத்தூர் வனக் கோட்டத்தில் புலிகள் கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில் சிறுமுகை வனச்சரகத்தில் ஆண் புலி ஒன்று உயிரிழந்திருப்பது வனவிலங்கு ஆர்வலர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து, புலி இறப்புக்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கூடலூரில் புலி தாக்கி வளர்ப்பு மாடு உயிரிழப்பு!