கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய ஆனைகட்டி, மாங்கரை, பாலமலை, தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இவைகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்களில் புகுந்து சேதங்களை விளைவித்துவருகின்றன.
இந்நிலையில், இன்று கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த நாய்க்கன்பாளையம் பகுதியில் அதிகாலை 5 மணி அளவில் ஐந்து காட்டு யானைக் கூட்டம் உணவுதேடி ஊருக்குள் வந்துள்ளது. இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் பெரியநாயக்கன்பாளையம் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் பட்டாசுகளை வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இதனிடையே, யானைகளை விரட்டும்போது அப்பகுதியிலிருந்த மின்மாற்றி மீது யானைக் கூட்டங்கள் மோதிச் சென்றதால் மின்சாரக் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறி ஏற்பட்டது. இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
காட்டு யானைகள் கூட்டமாக குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்களில் புகுவதைத் தடுக்க வனத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இரண்டு நாள்களுக்கு முன்பு இதே காட்டுயானைக் கூட்டம் கோவை துடியலூர் அடுத்த கதிர்நாயக்கன்பாளையம், லட்சுமி நகர் பகுதியில் நாய்களை துரத்திச் சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மனிதன் - யானை பிரச்னை: தீர்வைத் தேடும் சூழலியலாளர்!