கோவை வனக் கோட்டத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம் வனச்சரகம் 9200 ஹெக்டேர் நிலப்பரப்பு கொண்டது. இதில் யானை, காட்டெருமை, சிறுத்தை, புலி, கரடி ,புள்ளிமான், கடமான், சருகுமான், செந்நாய் காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பச்சை பசேலென்று வளர்ந்து இருக்கும் செடி, கொடிகள் என்றும் வற்றாத ஜீவநதி பவானி ஆறு ஆகியவை வனவிலங்குகளுக்கு உணவாகவும், தாகம் தீர்க்கும் நீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படும். குறிப்பாக யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
வன விலங்குகளின் தாகம் தீர்க்க வனப்பகுதியில் 19 தண்ணீர் தொட்டிகள் 4 கசிவு நீர்க் குட்டைகள் மற்றும் ஆற்று நீரை ஆதாரமாக கொண்டு தடுப்பணைகளை உள்ளன. வனத்துறை சார்பிலும் விவசாயிகளின் விளை நிலங்களில் இருந்தும் குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு தொட்டிகள், கசிவுநீர்க் குட்டைகளில் நிரப்பப்பட்டு வருகின்றன.
தற்போது கோடை காலம் சுட்டெரிக்க தொடங்கியுள்ளதால், செடி கொடிகள் காய்ந்ததும் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. அடர்ந்த வனப்பகுதியில் காலை முதல் மாலை வரை உணவு, நீர்நிலைகளைத் தேடி அலையும் வனவிலங்குள், வனப்பகுதியில் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளைத் தேடி கூட்டம் கூட்டமாக வருகின்றன.
ஒரு சில நேரங்களில் தாய் யானையுடன் வரும் குட்டி யானை தாகம் தீர தண்ணீரை குடித்த பின்னர் தொட்டியில் உள்ள தண்ணீரில் விளையாடி மகிழ்கின்றன. இதுதவிர காட்டெருமை, மான்கள், சிறுத்தை, புலி உள்ளிட்ட வன விலங்குகளும் தொட்டிகளில் நீர் அருந்த வருகின்றன.