கோயம்புத்தூர் : கோவை தடாகம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. அதில் பல்வேறு செங்கல் சூளைகள் உரிய அனுமதி பெறாமல், யானைகளின் வலசை பாதைகளை ஆக்கிரமித்தும், கனிமக் கொள்ளையிலும் ஈடுபட்டு வருகின்றன. அவைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கடந்த, 2019ஆம் ஆண்டு, சமூக செயற்பாட்டாளர் ராஜேந்திரன், முரளிதரன், தடாகம் பள்ளத்தாக்கு கனிமவள மீட்டெடுப்பு குழு உறுப்பினர் கணேஷ் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். நேற்று (பிப்.10) இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, யானை வழித்தடத்தில் உள்ள செங்கல் சூளைகளை அகற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.
இது குறித்து பேசிய தடாகம் பள்ளத்தாக்கு கனிமவளம் மீட்டெடுப்பு குழு உறுப்பினர் கணேஷ், "தடாகம் பகுதியில் பல்வேறு செங்கல் சூளைகள் அரசு அனுமதியின்றி இயங்குகின்றன. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியின் இயற்கை சூழல் பாதிக்கப்படுகி்றது. இந்த சட்டவிரோத செங்கல் சூளைகள், கனிமவள கொள்ளையில் ஈடுபடுகிறது என்றும், யானைகளின் வலசைப் பாதைகளை மறித்து இயங்கி வருவதாகவும் கூறி ராஜேந்திரன், விவசாயிகள், யானைகள் நலவாழ்வு குழு உள்ளிட்ட பலரும் கடந்த 2019, செப்,17 ஆம் தேதி பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
நேற்று வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு சட்டத்திற்கு புறம்பாகவும், யானை வழித்தடங்களை மறித்தும் செயல்படும் செங்கல் சூளைகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இந்த தீர்ப்பு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு தடாகம் பள்ளத்தாக்கு மீட்புக்குழு, விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் சார்பின் மனமார்ந்த நன்றிகள்.
உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அரசு அலுவலர்கள் போர்க்கால நடடிவடிக்கையாக, உடனடியாக செயல்படுத்தி தடாகம் பகுதியில் இயங்கி வரக்கூடிய சட்டத்திற்குப் புறம்பான கனிமக் கொள்ளை, யானைகள் வழித்தடங்களை மறித்து செயல்படும் செங்கல் சூளைகளை அகற்றி விவசாயிகளையும், யானைகள் வாழும் சூழ்நிலையையும் காப்பாற்றி, இந்த பகுதி வருங்காலங்களில் மக்கள் வாழும் சூழ்நிலையை ஏற்படுத்தி தர வேண்டும்" என்று தெரிவித்தார்.
வழக்கு தொடர்ந்த டி.எம்.எஸ். ராஜேந்திரன், "கனிம கொள்ளையை தடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தேன். அந்த வழக்கு விசாரணையில் உள்ளது. எனக்கு முன்பாக சமூக செயற்பாட்டாளரான முரளிதரன் என்பவர் யானைகள் வழித்தடத்தை மறித்து செங்கல் சூளைகள் இயங்கி வருவதாக வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது வழக்கில் யானை வழித்தடங்களில் உள்ள செங்கல் சூளைகளை அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இது வரவேற்கத்தக்கது. அதேபோல் கனிம வள கொள்ளை குறித்து நான் தொடர்ந்த வழக்கிலும் கண்டிப்பாக நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்த கனிம வள கொள்ளையினால் இங்குள்ள விவசாயம், கால்நடைகள் போன்றவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: யானை வழித்தடத்தில் செங்கல் சூளை! - உடனே அகற்ற உத்தரவு!