கோவை மாவட்டம் ஆலாந்துறை காருண்யா நகருக்கு அருகே கல்பத்தி பகுதியில் பயிரிடப்பட்ட நிலம் உள்ளது. இந்த நிலத்துக்குள் இன்று அதிகாலை யானைக் கூட்டம் புகுந்தது. அப்போது குட்டி யானை ஒன்று தோட்டத்தில் உயிரிழந்து கிடந்தது. இதனைத் தொடர்ந்து மற்ற யானைகளின் சத்தத்தைக் கேட்டு, அங்கிருந்தவர்கள் மதுக்கரை வனத்துறையினருக்கு தகவலளித்தனர். வனத்துறையினர் வருவதற்கு முன்பே மற்ற யானைகள் காட்டுக்குள் திரும்பிச் சென்றுவிட்டன.
பின் வனத்துறையினர் நடத்திய விசாரணையில், அது பெண் குட்டி யானை என்றும், சோலார் மின் வேலியில் சிக்கி குட்டி யானை உயிரிழந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து கோவை மண்டல தலைமை உதவி வன பாதுகாவலர் ஜெபஸ் ஜனா, மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், “யானை சோலார் மின் வேலியில்தான் சிக்கி உயிரிழந்தது. மின்சார வாரிய அலுவலர்கள் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மின்வேலிக்கு நேரடியாக மின்சாரம் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும். யானை மின்வேலி மீது விழுந்ததால் தொடர்ச்சியாக மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. பயிர் சேதத்திற்கு உண்டான இழப்பீடு தொகையை வனத்துறை, தோட்ட உரிமையாளருக்கு வழங்கும்” என அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகையில், 12 வோல்ட் மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 65 வயது யானைக்கு ராணுவ பாதுகாப்பு... ஏன் தெரியுமா?