நாளை (பிப்.25) பிற்பகல் கோயம்புத்தூர் வரும் பிரதமர் மோடி அரசு நிகழ்ச்சி, பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
பிரதமர் வருகைக்காக ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பிரதமர் வரக்கூடிய கோயம்புத்தூர் விமான நிலையம், அவர் பயணிக்கும் சாலை, பொதுக்கூட்டம் நடைபெறும் கொடிசியா மைதானம் உள்ளிட்ட இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
காவல் துறையினருடன் மத்திய பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பில் உள்ளனர். கொடிசியா மைதானம் சுற்றிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கொடிசியா மைதானத்தில் நடைபெற்று வரும் பணிகளை பாஜகவின் தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் சிடி ரவி, தமிழ்நாடு பாஜக தலைவர் எல் முருகன் ஆகியோர் பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சி.டி. ரவி கூறியதாவது, "மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ரூ. 6 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை வழங்கி உள்ளது. நாளை நடைபெற உள்ள அரசு விழாவில் சில திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார்.
பொதுக்கூட்டத்திற்கு சுமார் ஒரு லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வின்போது முதலமைச்சர், துணை முதலமைச்சர், அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள் ஆகியோர் பிரதமரை வரவேற்பு அளிக்க உள்ளனர்" என்றார்.
தொடர்ந்து காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை பாஜக அரசியலாக்க விரும்பவில்லை. இரு மாநிலங்களையும் பாஜக சமமாக பார்க்கிறது. இரு மாநில விவசாயிகளும் பயனடைய வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம். இந்த விவகாரத்தில் எவ்வித பாகுபாடும் காட்டக் கூடாது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'பெண்கள் அவர்களுக்கான அதிகாரங்களைப் பெற பாடுபட்டவர் ஜெ.!' - பிரதமர் மோடி புகழாரம்!