கோயம்புத்தூர்: கரோனா வைரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை மாவட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் 10 பேரும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அவர்கள் அளித்த மனுவில், "கோவை மாவட்டத்தில் தெருக்கள்தோறும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட வேண்டும். தனியார், அரசுப் பேருந்துகளுக்கு கிருமி நாசினிகள் வழங்கப்படுவதாக அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும். தனியார், அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கரோனா வார்டுகள் அமைத்து படுக்கை வசதிகளை உயர்த்த வேண்டும்.
மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு, தனியார் மருத்துவமனைகளில் காலி படுக்கைகள் விவரங்களை மக்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆம்புலன்ஸ் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.
கோவை மாவட்டத்தில் உள்ள பெரிய தொழிற்சாலைகள், நூற்பாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு அதிகமாகக் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும்.
முழு ஊரடங்கு நேரங்களில் சாலையோரம் வசிப்பவர்கள் மட்டும் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் மாநகராட்சி நிர்வாகத்தால் செய்யப்பட்ட ஒப்பந்தப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்.
குனியமுத்தூர் பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தை புலியை உடனடியாகப் பிடிக்க மாவட்ட நிர்வாகம், வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மதுக்கடைகளை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியதாகவும், எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'பாதுகாப்பாக எடுத்துச்செல்லப்படும் டிஎன்பிஎஸ்சி விடைத் தாள்கள்'