கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு நல்லட்டிபாளையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை உள்ளிட்ட உள் நோயாளிகளுக்கான சிகிச்சையும், நாள்தோறும் நூற்றுக்கணக்கான புற நோயாளிகளுக்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தொற்று பரிசோதனைகளும் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று அங்கு பணிபுரியும் மருத்துவர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர், அலுவலக பணியாளர்களில் சிலருக்கு கரோனா தொற்றின் அறிகுறிகள் இருந்துள்ளது. இதையடுத்து அவர்கள் பரிசோதனை மேற்கொண்டதில் மருத்துவர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர், அலுவலக பணியாளர் உள்ளிட்ட மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அப்பகுதியில் கரோனா பரிசோதனை மேற்கொண்டவர்களில் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட உள் நோயாளிகள் வெளியேற்றப்பட்டு மருத்துவமனை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. புதிதாக வரும் புறநோயாளிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மரத்தடியில் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டும். தொடர்ந்து கரோனா பரிசோதனையும் நடைபெற்றுவருகிறது.
மேலும் அங்கு பணியில் இருந்த மற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலக பணியாளர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.