கோவை: உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை 1.9 கிலோமீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் மூன்று இடங்களில் ஏறுதளம் இறங்கு தளம் அமைக்கப்பட உள்ளன. இதனையடுத்து உக்கடம் பஸ் ஸ்டாண்டுக்குள் ஐந்து இடத்தில் தாங்கு தூண்கள் அமைக்கப்பட்டு, ஏறுதளத்திற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் 3000-க்கும் மேற்பட்ட இரும்பு பைப்புகளை இணைத்து சாரம் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றிரவு(செப்.10) பில்லர் அருகே கான்கிரீட் போடப்பட்டுள்ளது. 200 அடி நீளத்திற்கும் 100 அடி அகலத்திற்கும் போடப்பட்ட கான்கிரீட் பாலத்தின் சாரங்கள் சரியத்தொடங்கியுள்ளதால் கான்கிரீட் பாலமும் சாய்ந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த நெடுஞ்சாலைப்பணியாளர்கள் பணியை நிறுத்தினர். பின்னர் பாலம் சரியப்போவதைக்கண்டு மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். அதேசமயம் எவ்வித பெரும் விபத்துகளும் இன்றி பணியாளர்கள் உயிர்தப்பினர். இது குறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'சாரத்திலிருந்த இணைப்பு கிளாம்புகள், சில இடங்களில் துண்டாகிவிட்டதாகவும், இதை சரி செய்து சாரத்தை சீரமைக்கும் பணி நடக்கும்.
கான்கிரீட் பகுதி கீழே விழாதென நினைப்பதாகவும், கான்கிரீட் எவ்வளவு தூரம் விலகி இருக்கிறது எனக் கண்டறிந்து அதற்கேற்ப திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் கான்கிரீட் பாலம் விழாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறோம்' எனக்கூறினார்.
இதையும் படிங்க: சோழர் கால ஒற்றை வார்ப்பு முறையில் 23 அடி உயர நடராஜர் சிலை