கோவை: பொள்ளாச்சி அடுத்த நல்லூத்துக்குளி பகுதியில் திரளான பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் குழந்தைகள் அருகிலுள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பயின்று வருகின்றனர். அவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து சிறிது தூரம் பள்ளிக்கு விவசாயத் தோட்டங்களின் வழியே நடந்து சென்று வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள ஆதிக்க சாதியினர் பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவியர்களைத் துன்புறுத்துவது, அடிப்பது, சாதிப் பெயரைக் கூறித் திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு (மே 07) பள்ளிக்குச் சென்ற மாணவர் ஒருவனை ஆதிக்கசாதி மாணவர்கள் தாக்கியதில் மயக்கமடைந்துள்ளான். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
பட்டியல் இன மாணவர்களைத் தாக்கியவர்களிடம் ’எதற்காக அடித்தீர்கள்?’ எனக் கேட்டபோது, ஆதிக்க சாதியினர் மிரட்டும் தொனியில் பேசியுள்ளனர். பள்ளி தலைமையாசிரியரிடம் முறையிட்டும் பலன் ஏற்படாததாலும் பள்ளிக்குச்செல்ல பட்டியல் இன மாணவர்கள் அச்சம் அடைந்ததாலும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில், பாதிக்கப்பட்ட மாணாக்கர்களுடன் வந்து அவரது பெற்றோர் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட சார்-ஆட்சியர் உரிய விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கானல் நீரான கல்லூரி படிப்பு : மறுக்கப்படும் இருளர் இன மக்களின் உரிமைகள்!