கோவை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து இன்னும் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் ஜிகா வைரஸ் எனும் தொற்று 20க்கும் மேற்பட்டோருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு - கேரள எல்லையை ஒட்டியுள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புகள் தீவிரமடைந்துள்ளன.
கோவை மாவட்டத்தில் உள்ள வாளையார் சோதனைச் சாவடியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு மேற்கொண்டார். கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் வாகனங்களுக்கு உரிய ஆவணங்கள் உள்ளதா அனைவரும் முக கவசம் அணிந்துள்ளனரா என்பதையும் கண்காணித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக கோவை மாவட்டத்தில் தினசரி வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 400க்கும் கீழ் குறைந்துள்ளது. இதற்கு அரசின் வழிகாட்டு நெறிகளும் மக்களின் ஆதரவும் தான் காரணம்.
மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை இன்னும் குறையக்கூடும். கேரளாவில் இருந்து கோவைக்கு வருபவர்கள் தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும்.
கேரளாவில் கரோனா மற்றும் ஜிகா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் கோவை மாவட்டத்தில் கேரள எல்லையை ஒட்டியுள்ள 13 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.