கோயம்புத்தூர்: கோவை ரங்கேகவுண்டர்வீதி, காட்டான் சந்து என்ற இடத்தில் வட மாநில மக்கள் அதிகம் வசித்துவருகின்றனர். இந்நிலையில் இன்று அங்குள்ள வீடுகளில் குப்பைகளைச் சேகரிக்கும் பணியில் ஜோதியம்மாள் (51) என்பவர் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது வினோத் ஜெயின் என்பவர் இல்லத்தின் குப்பைகளில் குட்கா, நெகிழி உறைகளை மக்கும் குப்பையில் கொட்டியிருப்பதாகவும், ஜோதியம்மாள் அவரிடம் மக்கும் குப்பை மக்காத குப்பைகளைப் பிரித்து அளிக்குமாறு கேட்டதாகவும் கூறப்படுகிறது.
குப்பைத் தொட்டியால் தாக்கிய இளைஞர்
இதற்கு வினோத் மறுப்புத் தெரிவித்திட இருவருக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வினோத் ஜோதியம்மாளை குப்பைத் தொட்டியைக் கொண்டும் காபி பிளாஸ்கினாலும் தாக்கியுள்ளார்.
இதில் கண் அருகே காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டிய நிலையில் அருகில் சகப் பணியாளர்கள் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த நிலையில் 30-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் புகார் அளிக்க திரண்டுவந்தனர். அவ்வாறு வந்தவர்கள் திடீரென காவல் நிலையம் முன் அமர்ந்ததால் காவல் துறையினர் தக்க நடவடிக்கை எடுக்கும்படி கூறியதைத் தொடர்ந்து புகார் அளிக்க உள்ளே சென்றனர்.
இது குறித்து பேட்டியளித்த தூய்மைப் பணியாளர்கள், அப்பகுதியில் உள்ள வட மாநில மக்கள் தங்களை இழிவாகப் பார்ப்பதாகவும், அங்குள்ள ஜெயின் கோயிலுக்கு கொசு மருந்து அடிக்கக்கூட தங்களை அவர்கள் அனுமதிப்பதில்லை என்றும், இழிவான சொற்களால் தங்களைப் பேசுவதாகவும் வேதனை தெரிவித்தனர்.
கோவை மாநகராட்சி ஆணையர் விசிட்
இதனிடையே சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜோதியம்மாளை கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று நலம் விசாரித்தார்.
வட மாநில இளைஞர் மீது வழக்குப் பதிவு
துப்புரவுப் பணியாளரை தாக்கிய வடமாநில நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி துப்புரவுப் பணியாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய வினோத் ஜெயின் வெரைட்டி ஹால் சாலை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு., அவர் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைச் சட்டம் உட்பட 294 பி, 324, 353 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இன்று ராமோஜி ஃபிலிம் சிட்டி திறப்பு: இது உலகின் மிகப்பெரிய திரைப்பட நகரம்!