கரோனா தொற்று தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநில அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதில், கரோனா தொற்று தடுப்புப் பணி, பாதுகாப்புப் பணி உள்ளிட்ட பணிகளில் உள்ளவர்கள் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பாதிப்பிற்குள்ளாகி வரும் காவலர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் காவலர்களின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் கோவை மாநகரக் காவல் ஆணையர் சுமித் சரண் தொற்று தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு கிருமிநாசினி, கையுறைகள், முகக் கவசங்கள், ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருள்கள் ஆகியவற்றை வழங்கினார்.
கோவை, குனியமுத்தூர் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது, சக காவலர்களிடம் பேசிய மாநகரக் காவல் ஆணையர் சுமித் சரண் “வாகன சோதனைகளில் ஈடுபட்டு வரும் காவலர்கள் அனைவரும் கட்டாயம் தகுந்த இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். அனைவரையும் முகக் கவசங்கள் அணியும்படி வலியுறுத்த வேண்டும். காவலர்கள் அனைவரும் ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருள்களை எடுத்துக் கொள்வதோடு, அடிக்கடி நீராகாரம் அருந்த வேண்டும். வைரஸ் தடுப்புப் பணிகளில் பணியாற்றும் அனைத்து காவலர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : ஊரடங்கிலும் சென்னைக்கு வந்து செல்லும் 64 விமானங்கள்