கோயம்புத்தூர்: குழந்தையின் உயிரைக் காப்பாற்ற 30 கி.மீ., தூரத்தை சரியான நேரத்தில் அடைந்த அவசர ஊர்தி ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணமுள்ளன.
கோவை மாவட்டம், அன்னூர் அருகேயுள்ள கருவலூர் கிராமத்திலுள்ள நூற்பாலையில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஷாஜகான் - மாமுனி தம்பதியினர் தங்கிப் பணியாற்றி வருகின்றனர். இரு தினங்களுக்கு முன்பு மாமுனிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இச்சூழலில் குழந்தையின் உடலில் இருந்து சிறுநீர் வெளியேறாமல் குழந்தையின் வயிறு பகுதி வீக்கமடைந்து சுவாசிப்பதற்கு குழந்தை சிரமப்பட்டுள்ளது.
அப்போது குழந்தையை அன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கிருந்து உடனடியாக குழந்தையை, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அந்நேரத்தில், 108 அவசர ஊர்தி வர கால தாமதமான நிலையில், வடமாநில பெற்றோரின் பரிதவிப்பை பார்த்த தனியார் அவசர ஊர்தி ஓட்டுநர் சிரஞ்சீவி, பச்சிளம் குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு இலவசமாக அழைத்துச் செல்வதாக பெற்றோரிடம் தெரிவித்து அவர்களை நம்பிக்கையூட்டினார்.
பின்னர், பச்சிளம் குழந்தை அவசர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது குறித்து கோவில்பாளையம், சரவணம்பட்டி காவல் நிலையங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பிற்பகல் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் என்பதால், இரு காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில், குழந்தையை ஏற்றி வரும் அவசர ஊர்தி செல்வதற்கான பாதையை காவல் துறையினர் ஒழுங்குபடுத்தி கொடுத்தனர்.
இதனையடுத்து அன்னூர் அரசு மருத்துவமனையிலிருந்து நேற்று (அக். 10) நண்பகல் 12.45 மணிக்கு, குழந்தையை ஏற்றிக்கொண்டு கிளம்பிய வாகனம், ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் 1.12 மணிக்கு; அதாவது 27 நிமிடங்களில் 30 கி.மீ தொலைவைக் கடந்து குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.
தற்போது அந்த பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறது. பச்சிளம் குழந்தையை காப்பாற்ற தனியார் அவசர ஊர்தி ஓட்டுநர் சிரஞ்சீவி மேற்கொண்ட முயற்சிக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணமுள்ளன.