கோவை மாவட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினர், துணை கண்காணிப்பாளர் வின்சென்ட், ஆய்வாளர் சரவணன் தலைமையில் துடியலூர் அருகேயுள்ள வெள்ளக்கிணறு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த லாரியை, சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி காவல் துறையினர் சோதனை செய்தபோது, அதில் 200 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. பின்னர் லாரியை ஓட்டிவந்த மதுரை பெத்தானியபுரத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் விசாகப்பட்டினத்திலிருந்து இரும்புக் கம்பிலோடை ஏற்றிக்கொண்டு, அதில் கஞ்சாவை மறைத்து வைத்து துடியலூருக்கு லாரியில் வந்ததும், அங்கு கம்பி லோடை இறக்கிவிட்டு, கஞ்சாவை மதுரைக்கு எடுத்துச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. பிடிபட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும்.
இதையடுத்து 200 கிலோ கஞ்சா மற்றும் லாரியை பறிமுதல் செய்த போைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினர், பார்த்தசாரதியை கைது செய்து, இதுதொடர்பாக கூடுதல் தகவல்களை பெற விசாரணை நடத்தி வருகின்றனர்.