கோயம்புத்தூர்: சிஐடியு அமைப்பின் சார்பில் மூன்று நாள் மாநில நிர்வாக குழுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் மூன்றாவது நாளான நேற்று (அக்.30) செய்தியாளர்களை சந்தித்த சிஐடியு மாநிலத் தலைவர் சவுந்தரராஜன், “தீபாவளிக்கு சில நாள்களே இருந்தாலும் கோவையில் பல நிறுவனங்களில் போனஸ் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட போனஸ் கிடைக்க அரசு தலையிட வேண்டும்.
பஞ்சாலைகளில் ஊதிய உயர்வு இல்லாமல் தொழிலாளர்கள் இருக்கின்றனர். பஞ்சாலைகளில் குறைந்தபட்ச ஊதியம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சியில் பணிகளை அவுட்சோர்சிங் கொடுக்கும் அதிமுக பாணியை இந்த அரசும் தொடர்கின்றது. அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும்.
பாலியல் துன்புறுத்தல்
தேசிய பஞ்சாலைகளை உடனடியாக திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். ஊரக உள்ளாட்சிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 425 ரூபாய் ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரக உள்ளாட்சி அமைப்பு, இதர தொழில் நிறுவனங்களின் பெண் ஊழியர்கள் கடுமையாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர்.
காங்கேயம் நகராட்சி ஆணையர் பெண்களை பகிரங்கமாக மிரட்டுகிறார். இது குறித்து புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பெண்கள் பாலியல் விவகாரங்களில் கூட மாதக்கணக்கில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தமிழ்நாட்டில் அபாயகரமான போக்கு.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு
பாலியல் தொல்லை விவரங்களில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரி காட்சன் பால் நிறுவனத்தில் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தை எதற்காக வேறு மாநிலத்துக்கு இடமாற்றம் செய்துள்ளனர்? இந்த விவகாரத்தில் அரசு தலையிட வேண்டும், இல்லையெனில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும். சுற்றுலாத்தலங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும், கோவையில் செங்கல் சூளைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது; இதைத் தளர்த்த வேண்டும்” என வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், “பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக எல்லா பெட்ரோல் பங்குகளிலும் துண்டு பிரசுரம் கொடுத்து டிசம்பர் 10ஆம் தேதி 10 நிமிடம் வாகனம் நிறுத்த வேண்டுகோள் விடுப்போம். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து டிசம்பர் 12ஆம் தேதி 12 மணி முதல் 12:10 மணி வரை வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படும். மாநில அரசு வந்து நூறு நாள்கள் ஆகிவிட்டது, போக்குவரத்து, ஆவின், சிவில் சப்ளை என எதிலும் போனஸ் கொடுக்கவில்லை.
பட்டாசு வெடிக்க கூடாது
கடந்த அரசு செய்த தவறை இந்த அரசும் தொடர்கிறது. தமிழ்நாட்டில் தொழிலாளர்கள் பிரச்சினைகள் குறித்து தொழிற்சங்கங்களை அழைத்து தமிழ்நாடு முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் பட்டாசு வெடிக்கக் கூடாது. செங்கல் சூளையில் மண் எடுக்கக்கூடாது என சொல்லப்படும் விவகாரத்தில் மாற்று ஏற்பாடுகள் என்ன இருக்கின்றது என்பதை அரசு சேர்த்துப் பார்க்க வேண்டும். அதனால், ஏற்படும் மக்கள் பாதிப்பு சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்சிக்கு வந்து நூறு நாள்களில் சொன்னதை செய்வதாக சொன்னதை முதலமைச்சர் செய்யவில்லை. முதலாளிகளுக்கு தேவையானவற்றை செய்யும்போது தொழிலாளர்களுக்குத் தேவையானதை செய்யவில்லை. மக்களுக்காக அரசு கடன் பட்டாலும் பரவாயில்லை, அரசு இவற்றை தொழிலாளர்களுக்காக செய்யவில்லை என வருத்தம் இருக்கிறது” என்றார்.
இதையும் படிங்க: அருப்புக்கோட்டை தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு