கோவை
கரோனா தடுப்பு பணியிலுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், மின்சார வாரியத்தின் ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை என சில இடங்களில் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
இதனால், பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் இவர்களில் சிலர் பாதிப்படைகின்றனர். இந்நிலையில், கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பு செய்து தர வேண்டும் என்றும் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை
நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே சிஐடியு தொழிற்சங்கத்தினர் கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட துணை செயலாளர் துரை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும், 8 மணி வேலை நேரத்தை 12 மணி நேரமாக நீட்டிப்பதையும், ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு செய்வதை கைவிட வேண்டும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கைவிடவேண்டும், 6 மாதங்களுக்கு வாகனங்களின் எப்.சி., டாக்ஸ், இன்ஸ்யூரன்ஸ் ஆகியவற்றிக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும், வாரிய பதிவியில்லாத அனைத்துப் பகுதி முறைசாரா தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதையும் படிங்க: சாதி சான்றிதழ் இல்லாததால் மருத்துவப் படிப்பை தொடர முடியாத பழங்குடி மாணவி!