கோயம்புத்தூர்: சூலூர் அருகே உள்ள முதலிபாளையத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக 25 ஏக்கர் பரப்பளவில் குட்டை உள்ளது. இதில் கடந்த சில தினங்களாகப் பெய்த மழையால் சுமார் 6 உயரத்திற்கு மழைநீர் தேங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அதே ஊரைச் சேர்ந்த அன்பு என்பவரின் மகன் சதீஷ்குமார், ஆறுச்சாமி என்பவரது மகன் பூபதி, சுரேஷ் என்பவரது மகன் சபரி வாசன் ஆகிய மூவரும் நேற்று(அக்.28) காலை குட்டையில் விளையாடச் சென்றுள்ளனர்.
பின்னர் மூவரும் துணிகளைக் கரையில் வைத்து விட்டு நீரில் இறங்கிக் குளித்துள்ளனர். அப்போது குட்டையிலிருந்த சேற்றில் மூவரும் சிக்கிக்கொண்டனர். காலை 10 மணிக்குக் குட்டைக்குச் சென்றவர்கள் மாலை 5 மணியாகியும் வீடு திரும்பாததால் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்களைத் தேடி குட்டைக்குச் சென்றுள்ளனர்.
அங்குக் கரையில் மூன்று பேரின் துணிகள் மற்றும் செருப்பு இருந்த நிலையில் சிறுவர்களைக் காணவில்லை. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி இளைஞர்கள் குட்டையில் இறங்கித் தேடியபோது சிறுவர்கள் மூவரும் ஒருவர் மீது ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர்.
இதனையடுத்து சூலூர் காவல் நிலையத்திற்கு இது குறித்து தகவல் அளித்தனர். இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற சூலூர் காவல் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் மூவரின் உடலை மீட்டனர்.
தொடர்ந்து சிறுவர்களின் உடல்களை உடற்கூராய்வுக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குட்டையில் குளிக்கச் சென்று 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ரஜினிகாந்த்துக்கு ரத்த குழாய் திசு அழிவு பாதிப்பு: வெளியான தகவல்