கோயம்புத்தூர் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கிறார்கள் என்று உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கோயம்புத்தூர் முழுவதும் நேற்று முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து நிலையம், ரயில்வே நிலையம் என மக்கள் கூடும் பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல் மாநில எல்லைகளிலும் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி, இடுக்கி மாவட்டங்களிலும் மாநில காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, கூடலூர் அருகே உள்ள குமுளி சோதனைச்சாவடியில் கேரள காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரண்டாம் நாளான இன்றும் அப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி நடந்துவருகிறது. கார், பேருந்து, டெம்போ, தோட்ட தொழிலாளர்கள் வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டே செல்கின்றன.