கோயம்புத்தூர்: செல்வபுரம் பகுதியில் பாஜக சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் 108 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உறி அடித்தார்.
திருவள்ளுவர் இந்து முறைப்படி வாழ்ந்தவர்
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”இளைய தலைமுறையினருக்கு நமது கலாச்சாரத்தை எடுத்து செல்லும் வகையில் பாஜக பொங்கல் விழாவை நடத்தி வருகிறது. பிரதமர் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் திமுக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரில் திருவள்ளுவருக்கு காவி உடை இருந்தது குறித்த கேள்விக்கு, திமுக உண்மையை புரிந்துகொள்ள தொடங்கி விட்டார்கள். திருவள்ளுவர் இந்து முறைப்படி வாழ்ந்தவர்.
குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசின் ஊர்தி அனுமதிக்காதது குறித்து பாதுகாப்புத்துறை விளக்கம் அளிக்கும். குடியரசு தின விழாவில் பங்கேற்கும் ஊர்திகள் தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டு எந்த பொருள்கள் அதில் இடம் பெற வேண்டும் என்று ஆலோசனை வழங்கும்.
சட்டரீதியாக எதிர்கொள்வோம்
அதனடிப்படையில் இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் தான் தமிழ்நாடு ஊர்தி மறுக்கப்பட்டுள்ளது. கேரள மாநில ஊர்தியில் கூட ஆதிசங்கரர் படம் இடம்பெறக் கூடாது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளதால் நாராயணகுருவின் படமும் இடம் பெறவில்லை.
தனியார் தொலைக்காட்சியில் வெளியான நகைச்சுவை நிகழ்ச்சி என்பது கருத்து சுதந்திரம் அல்ல. குழந்தைகளைப் பாதுகாக்கும் NCPCR அமைப்பின் (National Commission for Protection of Child Rights) விதிகளுக்கு எதிராக நிகழ்ச்சி நடத்தப் பட்டுள்ளது. இதனை சட்டரீதியாக அணுகுவோம்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு சீட்டு வழங்க முடியாது என்ற நிலைப்பாடு இருந்ததால் சிலர் பாஜகவிலிருந்து விலகி சென்றுள்ளனர். உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று தீரும்.
கண்டன ஆர்ப்பாட்டம்
கோயம்புத்தூர் மாநகராட்சியில் 30 சாலைகளில் வாகனங்கள் நிறுத்த தயாரிக்கப்பட்ட கட்டணம் ஏற்புடையது அல்ல. இதனைக் கண்டித்து 21ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அதற்கு முன்பாக கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகம் அந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் மக்கள் இதற்கு தேர்தலின்போது தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.
பாஜக-அதிமுக கூட்டணி சிறப்பாக உள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தான் பல்வேறு குழப்பங்கள் நிகழ்ந்து வருகின்றது. காங்கிரஸ் கூடாரம் கூடிய விரைவில் காலியாகிவிடும்.
உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும்
கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் அவதூறாக பேசி வருகிறார். மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் எனப் பேசுகிறார். அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
மேகதாதுவில் அணை அமைக்கக்கூடாது என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. தமிழ்நாடு அரசு மாநில உரிமைகளை மீட்டெடுக்கா விட்டால் காவிரி முல்லை பெரியாறு அணைகளின் உரிமைகள் கூட நம்மிடமிருந்து பறிபோகும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் கரோனா பொங்கல் விடுமுறைக்குப் பின் அதிகரிக்கும்'