உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமான ஒன்று ‘பக்ரீத் பண்டிகை’ ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான ’துல் ஹஜ்’ஜின் 10ஆம் நாளில் கொண்டாடப்படுகிறது. இத்திருநாளில் இஸ்லாமியர்களின் அடிப்படை கடமைகளில் ஒன்றான ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதை ’பக்ரீத்’ என்று கூறுவார்கள்.

இந்த திருநாளில் இஸ்லாமியர்கள் அனைவரும் தவறாமல் அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்புத் தொழுகை மேற்கொள்வார்கள். இதனை தமிழில் ‘தியாகத் திருநாள்’ என்றும், அரபியில் ‘ஈத் அல்-அதா’ என்றும் அழைப்பார்கள். இதேபோல் பக்ரீத் திருநாளான இன்று கோவை பூ மார்கெட் பகுதியில் உள்ள ஹைதர் அலி திப்பு சுல்தான் ஜமாத்தில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

இந்த சிறப்புத் தொழுகையில் ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். இதேபோல் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் திருப்பூர் நொய்யல் வீதியில் உள்ள அரசுப் பள்ளியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
அதில் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து தொழுகை முடிந்தவுடன் ஒருவருக்கொருவர் கட்டி அணைத்து பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர்.