ETV Bharat / city

எனது மகனை முதலமைச்சர் கட்டியணைப்பார் என நினைத்து கூடப்பார்க்கவில்லை - அற்புதம்மாள் உருக்கம்! - ஸ்டாலின்

'முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறையிலிருந்து வெளிவந்த, எனது மகன் பேரறிவாளனை கட்டியணைப்பார் என நினைத்துகூடப் பார்க்கவில்லை' என்று '31 ஆண்டு கால நெடிய வரலாற்றுப் போராட்டத்தில் தாய் அற்புதம்மாள்' என்ற தலைப்பில் கோவையில் நடந்த பாராட்டு விழாவில் அற்புதம்மாள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அற்புதம்மாள்
அற்புதம்மாள்
author img

By

Published : Jul 3, 2022, 1:22 PM IST

கோவை: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் கொலை வழக்கில் 31 ஆண்டுகாலமாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் விடுவித்தது. முன்னதாக, அவர் உட்பட தமிழ்நாட்டில் 7 பேரின் விடுதலைக்காக பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்றன.

பேரறிவாளனின் தாயாருக்கு பாராட்டு விழா: இந்நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது மகனின் விடுதலைக்காக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, இவருக்கு நேற்று (ஜூலை2) கோவையிலுள்ள தனியார் அரங்கு ஒன்றில் அனைத்து சமூக இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக, '31 ஆண்டு கால நெடிய வரலாற்றுப் போராட்டத்தில் தாய் அற்புதம்மாள்' என்ற தலைப்பில் பேரறிவாளனின் தாயாருக்குப் பாராட்டு விழா நடத்தினர்.

அற்புதம்மாளின் தியாகம் குறித்தும், அவரது மகனுக்காக தனி ஒருவராக நியாயமே வெல்லும் என்ற தன்னம்பிக்கையை மட்டும் கொண்டு மகனின் விடுதலைக்காக அயராது பாடுபட்டது குறித்தும் அவ்விழாவில் கலந்து கொண்ட பல்வேறு இயக்கங்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பேசினர். மேலும் அப்போது அவர்கள், பேரறிவாளன் விடுதலையைப் போலவே இவ்வழக்கில் உள்ள மற்றவர்களும் விடுதலை ஆவார்கள் என நம்பிக்கைத் தெரிவித்தனர்.

ஒற்றுமையுடன் போராடியவர்களுக்கு நன்றி: இதைத்தொடர்ந்து அற்புதம்மாள் பேசுகையில், 'சாதி, மதம், கட்சி கடந்து எனது மகனின் விடுதலைப்போராட்டத்திற்குப் பலர் வந்தனர். பலர் உடன் இருந்ததால் என் மகனின் விடுதலை சாத்தியம் ஆனது. அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவிக்கிறேன். கோவையில் இருந்து நன்றி நிகழ்வு தொடங்கப்பட்டுள்ளது.

சட்டப்போராட்டமே வெற்றி தரும்: நான் 31 ஆண்டு காலம் ஓடினேன். காலம் நேரம் நான் பார்க்கவில்லை. அதேபோல, பல போராட்டங்களுக்குச் சென்றேன். இருப்பினும் விடுதலை சாத்தியப்படும் முன் போராட்டங்களில் கலந்துகொள்ளவில்லை.

எந்த சட்டத்தால் பாதிக்கப்பட்டோமோ அந்த சட்டப்போராட்டத்தை நோக்கி ஓடினோம். சட்டப்படி விடுதலை ஆகினோம். சலுகை வாயிலாக அல்ல. உச்ச நீதிமன்றமே விடுதலை செய்தது. பேரறிவாளன் விடுதலை அடைந்தும் அவர் மகிழ்ச்சி அடையவில்லை. வழக்கில் உள்ள அனைவரின் விடுதலையையும் எதிர்பார்க்கிறார்.

ஏனையவருக்கும் விடுதலை: இந்த வழக்கு ஒரு குளறுபடியான வழக்கு. இன்றுவரை விடை தெரியாத கேள்வி என்னவென்றால் வெடிகுண்டு செய்தது யார்? என்று. அதை சிபிஐ தெரிவிக்கின்றனர். அந்த வழக்கில் தான் 9 வோல்ட் பேட்டரி வாங்கி கொடுத்தவர் விடுதலை ஆகியுள்ளார். மற்றவர்களும் விடுதலையாக வேண்டும் என்ற அடிப்படையில் தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் கட்டியணைப்பார் என நினைக்கவில்லை: பேரறிவாளனின் விடுதலை எல்லாருக்கும் வாய்ப்பாக அமையும். அனைவரும் வந்த பின் விழாவை நடத்துவோம். இதை நீதிமன்றம் முடிவு செய்யும். அரசும் முன்னெடுக்கிறது. பேரறிவாளனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டி அணைத்து வரவேற்றதை எதிர்பார்க்கவில்லை. மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கு அனைத்தும் தெரியும். யாரை கட்டியணைக்க வேண்டும். கட்டியணைக்கக் கூடாது என்று.

மற்றவர்களின் விடுதலைக்காக நேர்மையாக சட்டப்படி வேலை செய்வோம். முகம் தெரியாத அனைவருக்கும் நன்றி சொல்கிறேன். மறுபடியும் வாய்ப்பு கிடைத்தால் கூட, திரும்பவும் வந்து நன்றி சொல்வேன்' என்று நெகிழ்ச்சிபடத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பேரறிவாளன் மற்றும் அவரது தாயாருக்குப் புத்தகம் உள்ளிட்டப் பல்வேறு நினைவுப்பரிசுகளை வழங்கி, தங்களின் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.

கோவையில் பேரறிவாளனின் தாயாருக்குப் பாராட்டு விழா
இதையும் படிங்க: ஒரு தாயின் வெற்றி - பேரறிவாளனை மீண்டும் ஈன்ற அற்புதம்மாள்!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.