கோவை: அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், போட்டியிட விரும்பும் உத்தேசப் பட்டியலை அதிமுக தலைமையிடம் பாஜக அளித்துள்ளது. அதில், கோவை தெற்கு தொகுதியை வானதி சீனிவாசனுக்காக பாஜக கேட்டிருப்பதாகவும், அதற்கு அதிமுக தலைமை ஒப்புக்கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியானது.
இதனைக் கண்டித்து கோவையில் அதிமுக தொண்டர்கள் இன்று(மார்ச் 10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கோவை தெற்கு தொகுதியை தற்போதைய அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரான அம்மன் அர்ஜுனனைத் தவிர வேறு யாருக்கும் ஒதுக்கக்கூடாது என முழக்கங்கள் எழுப்பப்பட்டது. அதையும் மீறி, பாஜகவிற்கு ஒதுக்கினால் அனைவரும் ஒட்டுமொத்தமாக அதிமுகவிலிருந்து விலகுவோம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரித்தனர்.
இன்னும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவாகாத நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு எதிராக அக்கட்சியின் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.