கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடவுசெய்யும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மரக்கன்று நடும் விழாவை தொடங்கி வைத்தார். இதையடுத்து மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:
மாணவர்களே நாளைய நாட்டை கட்டமைப்பவர்கள். கையூட்டு இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். அருகில் இருப்பவர்கள் பயன்படுத்தினாலும் தவிர்ப்பதற்கு அறிவுறுத்த வேண்டும்.
நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடும் நிலையில் அவர் அறிவுறுத்தியுள்ள உழைப்பு இல்லாத செல்வம், மனசாட்சி இல்லாத மகிழ்ச்சி, மனிதநேயம் இல்லாத அறிவியல், பண்பாடு இல்லாத அறிவு, கொள்கை இல்லாத அரசியல், நீதி-நெறி இல்லாத வணிகம், தியாகம் இல்லாத வழிபாடு ஆகிய ஏழு பாவங்களை விலக்கி வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.
எளிமையாகவும் வெளிப்படையாகவும் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். இங்கு நடப்படும் மரக்கன்றுகளைக் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். நீங்கள் கல்லூரியை விட்டுச் சென்றாலும் தொடர்ந்து மரக்கன்றுகளை ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் மாணவர்கள் நடவு செய்த மரக்கன்றுகளை பார்த்துச் செல்ல வேண்டும்.
அனைவரும் குறைந்தபட்சம் தங்களின் பிறந்தநாளுக்காவது ஒரு மரக்கன்றை நடவு செய்ய வேண்டும்.
இவ்வாறு பன்வாரிலால் புரோகித் பேசினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணை வேந்தர் நீ. குமார், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச் செயலர் ககன்தீப் சிங் பேடி, வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதல்வர் க.கு. சுரேஷ், பல்கலைக்கழக மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், கல்லூரி பேரசியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
வனக்கல்லூரியின் 50 ஏக்கர் பரப்பளவில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தில் முதல் கட்டமாக 10 ஆயிரம் கன்றுகள் வியாழக்கிழமை நடவு செய்யப்பட்டன.
பூவரசு, வேம்பு, ஈட்டி, சந்தனம், பூரசு, தாண்றிக்காய், அலுஞ்சி, தனுக்கு, இலுப்பை, புங்கன், கருவேல் போன்ற 35 வகையான நாட்டுவகை மரக்கன்றுகள் நடவுசெய்யப்பட்டன.
ஆளுநருடன் சேர்ந்து மாணவர்கள், ஆசிரியர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 1000 பேர் மரக்கன்றுகளை நடவுசெய்தனர். தொடர்ந்து பருவமழை முடிவதற்குள் ஒரு லட்சம் மரக் கன்றுகள் நடவுசெய்யப்படும் எனவும் மரங்கள் வளர்ந்துவரும்போது அடர்ந்த வனமாகவும் பிராண வாயு உற்பத்தி மையமாகவும் பல்லுயிர்கள் பெருக்க மண்டலமாகவும் திகழும் எனவும் கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலமாக வரவேண்டும்' - ஆளுநர்