கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அரசம் பாளையத்தில் இருந்து காரச்சேரி செல்லும் வழியில் அணித்மேத் என்பவருக்குச் சொந்தமான நூற்பாலை இயங்கிவருகிறது. அங்கு தயாரிக்கப்படும் நூல் கோவை மாவட்டத்தின் பல பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நூற்பாலையின் ஒரு பகுதியில் நூல் தயாரிக்கத் தேவையான பஞ்சும், மற்றொரு பகுதியில் பஞ்சிலிருந்து தயாரிக்கப்பட்ட நூல் கட்டுகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, அருகிலிருந்த பஞ்சில் தீ மளமளவென பற்றிக்கொண்டது.
இதனால் வேலையிலிருந்த அனைவரும் பதறியடித்து வெளியே ஓடினர். அதனையடுத்து கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், போராடியும் தீ கட்டுக்குள் வராததால், கூடுதலாகக் கோவை, பொள்ளாச்சி பகுதியில் உள்ள தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நூல் கட்டுகளும், பஞ்சுகளும் எரிந்து நாசமானது. தீ விபத்திற்கான காரணம் குறித்து கிணத்துக்கடவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து தீ ஆறு மணிநேரமாக, தொடர்ந்து இருந்து வந்ததால் சேதம் அதிகரிக்கக்கூடும் என்று காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.