கோவை மாவட்டம் வால்பாறையில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குனருமான தெபா ஷுஷ் ஜானா, துணை இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் ஆகியோர்களின் அறிவுறுத்தலின்படி பருவமழைக்கால சிறப்பு ரோந்துபணி மேற்கோள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மானாம்பள்ளி வனச்சரகம் ஹைபாரஸ்ட் எஸ்டேட் சுற்றுக்குட்பட்ட காப்புக்காடு எல்லைப்பகுதியிலுள்ள தாய்முடி எஸ்டேட்டில் கடந்த 2 ஆம் தேதியன்று மாலை முள்ளம்பன்றியை சிலர் வேட்டையாடி சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது.
இதையடுத்து, வனச்சரக அலுவலர் நட்ராஜ் அறிவுரையின்படி கல்லார் பிரிவு வனவர் ஷேக் உமர் தலைமையில் வனக்காப்பாளர் சதாம் உசேன் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினரால் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது முள்ளம்பன்றியை வேட்டையாடி சமைத்த கெஜமுடி எஸ்டேட்டை சேர்ந்த சிவா (36), மாரியப்பன் (56), கண்ணன் (53) ஆகிய மூவரையும் வனத்துறையினர் பிடித்து விசாரித்தபோது அவர்கள் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவர்கள் மூவருக்கும் தலா 20 ஆயிரம் வீதம் அபாராதம் விதித்துள்ளனர்.