கோவை: போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட தானிக்கண்டி சரகத்தில் (மார்ச் 22) நேற்று முன்தினம், சுமார் 10 வயது பெண் யானைக்குட்டி ஒன்று தாடையில் காயம் ஏற்பட்டுள்ளதாக வனப்பணியாளர்கள் அளித்த தகவலின்பேரில், கோவை வனமண்டல அலுவலர் சுகுமார், முதுமலை மருத்துவர் ராஜேஷ் மனோகரன் குழுவினர் உட்பட வனத்துறை அலுவலர்கள் அந்த யானைக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தனர்.
யானையின் காயம் குறித்து ஆராயும்போது அவுட்டுக்காயால், யானைக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் குழு தெரிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று(மார்ச் 24) சிகிச்சைப் பலனின்றி யானை உயிரிழந்தது. இன்று அல்லது நாளை யானையின் உடல் அடக்கம் செய்ய உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிர்கள்மீது அன்பு வேண்டும்: சமீப ஆண்டுகளாக வன விலங்குகளுக்கான வாழும் சூழ்நிலை குறைந்து கொண்டே வருகிறது. மனித வாழிடங்களுக்குள் மனிதர்கள் தங்களுள்ளே ஏமாற்றுதல், வஞ்சனை, கொலை, கொள்ளை பிறரின் சொத்துகளை அபகரித்தல் உள்ளிட்டப் பல குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது போக, உயிர்களின் மதிப்பை அறியாத இரக்கமற்ற சிலரோ முன்னதாக மேலே குறிப்பிட்ட எதையும் அறியாத வன உயிர்களினை வேட்டையாடுதல், மக்கள் வாழிடங்களை விட்டு விரட்ட முயலுதல் என்ற பெயரில் அவற்றை சித்ரவதை செய்து துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவதன் விளைவாக பலியான வன உயிர்களின் எண்ணிக்கையோ ஏராளம் உண்டு.
அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் கர்ப்பிணி யானையை கொடூரமான முறையில் மனிதநேயம் அற்றவர்களாக, கிட்டதட்ட காடுகளில் வாழும் காட்டுமிராண்டிகளைப் போன்று சித்ரவதைக்குள்ளாக்கி இரண்டு உயிர்களை கொலை செய்ததை சமூக வலைத்தளங்களில் அனைவரும் அறிந்திருந்தோம்.
யானைக் குட்டி இறப்பு: அதே போல மற்றொரு சம்பவத்தில் (மார்ச் 24) இன்று ஒரு யானைக்குட்டி ஒன்று பரிதாபமாக தனது இன்னுயிரை இழந்துள்ளது. கோவை அருகே வனவிலங்கு வேட்டைக்காக வைக்கப்பட்ட அவுட்டுக்காயை கடித்ததில் 10 வயது யானைக் குட்டி ஒன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'யானை-மனித மோதல்' - 3 ஆண்டுகளில் 301 யானைகள் மரணம்