சென்னை: சோமாட்டோவில் 10 நிமிடங்களில் உணவு டெலிவரி செய்யும் திட்டம் அறிமுகப்படுத்த இருப்பதாக அந்நிறுவனம் சமூக வலைதளங்களில் அறிவித்தது. இந்த டெலிவரி திட்டம் அறிமுகப்படுத்தினால் போக்குவரத்து விதிமுறைகள் மீறல் மற்றும் விபத்துகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கண்டனங்கள் கிளம்பின.
இந்நிலையில், ஊடகங்கள் வெளியிட்ட சில தகவல்களை கருத்தில் கொண்டு, சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையளர் கபில்குமார் சாரட்கர் நேற்று முன்தினம் (மார்ச் 25) உணவு சேகரித்து விநியோகிப்பவர்கள், இ-காமர்ஸ் சேவை வழங்கும் விநியோக மேலாளர்களுடன் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஸ்விகி, சோமாட்டோ உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
போக்குவரத்து விதிமீறல்கள்: இக்கூட்டத்தில், முந்தைய 2021, ஜூலை 10 அன்று நடைபெற்ற முதல் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட பல்வேறு பிரச்சனைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு, உணவு வணிக விநியோக ஊழியர்களால் போக்குவரத்து விதி மீறல்களைக் குறைப்பதில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. முதல் கூட்டத்திற்கு பிறகு டெலிவரி ஊழியர்களால் போக்குவரத்து விதிமீறல்கள் குறைந்துள்ளதை தெரிந்துகொள்ள முடிந்தது.
மேலும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலும், போக்குவரத்து விதிமீறல்கள் இல்லாமலும், உணவு வணிக விநியோகத்தினை எளிதாக்குவதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. சோமாட்டோவின் 10 நிமிட உடனடி டெலிவரி திட்டம் இந்தியாவில் சில நகரங்களில் தொடங்க திட்டமிடப்பட்ட ஒரு முன்னோடி திட்டம் மட்டுமே என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூட்டத்தில் முடிவு: சோமாட்டோ இன்ஸ்டன்ட் என்ற திட்டம் தற்போது சென்னையில் அறிமுகப்படுத்த திட்டமிடவில்லை என்று அந்நிறுவனம் தெளிவுப்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட விநியோக நேரம் சம்மந்தப்பட்ட எந்தவொரு திட்டமும் முறையான முன்னறிவிப்பு மற்றும் காவல்துறை ஒருங்கிணைப்புடன் மட்டுமே தொடங்கப்படும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 10 நிமிடங்களில் உணவு டெலிவரி - சோமாட்டோ நிறுவனத்தின் அறிவிப்பால் சர்ச்சை