சென்னை: மடிப்பாக்கத்தில் இரவு நேரங்களில் வீட்டிற்கு வெளியில் நிறுத்தப்படும் வாகனங்கள் தொடர்ந்து திருடு போவதாக மடிப்பாக்கம் காவல் துறையினருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து மடிப்பாக்கம் உதவி ஆணையர் பிராக் டி ரூபன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இருசக்கர வாகனம் திருடுபவர்களை தேடி வந்தனர்.
சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, அவர்கள் செல்லும் வழியெல்லாம் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தபோது அனகாபுத்தூர் வழியாக செல்வது தெரியவந்தது. அதனை வைத்து அங்கேயே கண்காணித்து அப்பகுதியைச் சேர்ந்த பஃஷாலுதீன் (26), சாம்சன் (24), பல்லாவரத்தைச் சேர்ந்த பைக் மெக்கானிக் ராஜபாண்டியன் (28) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து விலை உயர்ந்த 5 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் மடிப்பாக்கம் பகுதியில் நடந்து சென்ற கல்லூரி மாணவர்களிடம் செல்போன் பறித்த தனியார் உணவு டெலிவரி செய்யும் பள்ளிக்கரணையைச் சேர்ந்த மாதேஷ் (22), சேலையூரைச் சேர்ந்த லோகேஷ் (25), விக்னேஷ் (24) ஆகிய மூவரையும் மடிப்பாக்கம் காவல் துறையினர் கைது செய்து ஐபோன், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட 6 பேரையும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ரேஷன் அரிசி பதுக்கல்... ஒருவர் கைது