சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூர் பாக்கம் பகுதியில் வசிப்பவர் உதயசூரியன்(32). இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீபெரும்பத்தூரில் ஒரு தனியார் தொழிற்சாலையில் 40 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்துள்ளார். திடீரென்று அந்த தொழிற்சாலை மூடப்பட்டதால் வேலையை இழந்த உதயசூரியன் வேறு ஒரு கம்பெனியில் குறைந்த ஊதியத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இதனால் வருமானம் போதாததாலும் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் அவர் சமூக வலைதளங்களில் ஏடிஎம்மில் கொள்ளை அடிப்பது எப்படி என்ற காணொளி காட்சிகள் மூலம் திருட கற்றுக்கொண்டிருக்கிறார். தான் கற்றுக்கொண்டதை வைத்து அவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பாக்கம் அருகேயுள்ள ஒரு தனியார் வங்கி ஏடிஎம்மில் நான்கு லட்ச ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்.
பின்னர் கொள்ளையடித்த பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்த உதயசூரியன், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள காவலாளி இல்லாத ஏடிஎம்களில் கொள்ளை அடிக்க திட்டமிட்டுள்ளார். அவ்வாறு நேற்று முன்தினம் இரவு ஒரு அரசு வங்கியின் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டார். அப்போது அந்தப் பகுதியில் ரோந்து பணியில் இருந்த முத்தாபுதுபேட்டை காவல்துறையினர் உதசூரியனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.