சென்னை வழியாக போதை பொருள் கடத்தப்படுவதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், கடந்த 24 ஆம் தேதி காரனோடை டோல் பிளாசா பகுதியில் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த காரை வழிமறிக்கும் போது, அந்த கார் நிற்காமல் டோல் பிளாசாவை உடைத்தும், போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் கார் மீது மோதிவிட்டும் நிற்காமல் வேகமாக சென்றது.
இதனால் உடனடியாக மத்திய போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் காரின் பதிவு எண்ணை வைத்து நடத்திய விசாரணையில், அதிவேகமாக சென்ற கார் வண்டலூர் நெடுஞ்சாலை அருகே கேட்பாரற்று கிடப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து அந்த காரை சோதனையிட்ட போது 65 கிலோ கஞ்சா இருப்பதை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து காரை ஓட்டிச் சென்ற நபர்களின் சிசிடிவி காட்சிகளை வைத்து, விசாரணை நடத்தி திருவனந்தபுரத்தை சேர்ந்த மூன்று இளைஞர்களை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கைப்பற்றப்பட்ட கஞ்சா ஆந்திரப்பிரதேசத்திலிருந்து, கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் பிளிப்கார்ட் குடோனில் அடையாளம் தெரியாத நபர்கள் கைவரிசை!