சென்னை: மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் கல்லூரி மாணவி ஒருவர் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், ஃபேஸ்புக் மூலம் தனக்கு அறிமுகமான நபர், தன்னைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி பணம், நகைகளை பறித்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகார் மனுவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் காவல் துறையினர், தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மாணவியை ஏமாற்றிப் பணம் பறித்தவர் திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரை காவலர்கள் கைது செய்து நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியிடம் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்படுத்திக்கொண்ட லோகேஷ், மாணவியின் வாட்ஸ் ஆப் எண்ணைப் பெற்று, அவருடன் நெருக்கமாகப் பழகி வந்துள்ளார். இதனை, மாணவியின் பெற்றோரிடம் தெரிவித்துவிடுவதாககூறி மிரட்டி சுமார் 17 ஆயிரம் ரூபாய் பணம், 13.5 சவரன் தங்க நகைகள் ஆகியவற்றை பெற்றது தெரியவந்தது.
பெண்களை ஏமாற்றி வந்த இளைஞர் கைது
மேலும், கைது செய்யப்பட்ட லோகேஷின் செல்போனை காவல் துறையினர் ஆய்வு செய்தபோது நிஷாந்த், விமலேஷ் என்ற பொய்யான பெயர்களில் சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களையும், புதுச்சேரி, மலேசியா பெண்களையும் ஆசை வார்த்தைகள் கூறி அவர் ஏமாற்றி பணம் பறித்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, லோகேஷிடம் இருந்து 72.2 கிராம் தங்க நகைகள், இரண்டு செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: காதலியை 17 முறை கத்தியால் குத்திக்கொன்ற இளைஞன்: கேரளாவில் பயங்கரம்