மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்துவது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் ரமேஷ் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மெரினாவில் ஆக்கிரமிப்புகள் முளைத்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளதை, எப்படி சரி செய்யப் போகிறீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளிக்க அரசுத்தரப்பு வழக்கறிஞர், ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட்டு விட்டன என்றார். மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், இனிமேல் ஆக்கிரமிப்புகள் முளைக்காமல் பார்த்துக் கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.
பின்னர் மீன் சந்தை அமைப்பது, நடை மேம்பாலம் அமைப்பது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பிய போது, நிலத்தை வகை மாற்றம் செய்வது தொடர்பான கோப்பு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்து நவம்பர் 11 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
மெரினா கடற்கரையில் பொது மக்களுக்கு எப்போது அனுமதி வழங்கப்படும் என நீதிபதிகள் கேட்டதற்கு, அதுகுறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.
மெரினாவில் நவம்பர் மாதம் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்த நீதிபதிகள், மாநிலம் முழுவதும் உள்ள கடற்கரைகளை மேம்படுத்த வேண்டும் எனவும், மெரினாவை தூய்மையாக வைக்க ஏதுவாக கடற்கரையில் தினமும் காலை, மாலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும்படி சென்னை மாநகராட்சி ஆணையருக்கும், காவல் ஆணையருக்கும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். நீதிபதிகளும் நடை பயிற்சி செய்தால் எல்லாம் சரியாகும் எனவும் தெரிவித்தனர்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை நவம்பர் 11ஆம் தேதி தள்ளிவைத்த நீதிபதிகள், அன்றைய தினமும் காணொலியில் ஆஜராக இரு அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க: கிராமசபைக் கூட்டத்தை உடனடியாக நடத்த உத்தரவிட வலியுறுத்தல் கடிதம்