சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (அக். 20) வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழ்நாட்டில் உணவு விநியோகிக்கும் தனியார் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி ஒருவர் வாடிக்கையாளரிடம் பேசும் போது, இந்தி தேசிய மொழி என்பதால் அனைவரும் கொஞ்சமாவது இந்தி கற்றிருக்க வேண்டும் என்று கூறியிருப்பது சமூக ஊடகங்களில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் சேவை வழங்காதது மட்டுமின்றி, தமிழ்நாட்டில் உள்ளவர்களாக இருந்தாலும் இந்தி மொழியை கற்றிருக்க வேண்டும் என்று அந்நிறுவன பிரதிநிதி கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.
இந்தி அலுவல் மொழி... அவ்வளவே
இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல, நாட்டின் அலுவல் மொழிகளில் ஒன்றுதான். அலுவல் மொழியாக இந்தி இருந்தாலும் கூட, பிற மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் இந்தியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது.
ஆனாலும், பல்வேறு வழிகளில் தமிழர்கள் மீது இந்தியை திணிப்பதற்கான முயற்சிகள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. தனியார் உணவு விநியோக நிறுவனம் தான் இத்தகைய முயற்சியில் முதலில் ஈடுபட்டது என்று கூற முடியாது.
தொடரும் இந்தி திணிப்பு
வங்கிகள், அஞ்சல் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், ‘இந்தியனாக இருந்து கொண்டு இந்தி பேசத் தெரியாதா?’ என்ற அவமதிக்கும் வகையிலான கேலி வினாக்கள் தமிழர்களை நோக்கி எழுப்பப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
தமிழ்நாட்டில் இந்தி தெரியாததால் தமிழர் ஒருவருக்கு வீட்டுக் கடன் மறுக்கப்பட்ட கொடுமையும் நடந்தது. இவை ஏற்க முடியாதவை.
தமிழ்நாட்டில் இத்தகைய கொடுமைகள் இனியும் நடக்கக்கூடாது என்பதுதான் தமிழ்நாடு மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும். இந்த எதிர்பார்ப்புகளை தமிழ்நாடு அரசு ஒரே ஒரு சட்டத்தின் மூலம் மிகவும் எளிதாக நிறைவேற்றி விட முடியும்.
தடுக்க தனிச்சட்டம் வேண்டும்
தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மட்டும்தான் வேலை என்று சட்டம் இயற்றுவதன் மூலம் இச்சிக்கலை தீர்க்க முடியும். ஆனால், அதைச் செய்ய தமிழ்நாடு அரசு தயங்குவதன் நோக்கம்தான் புரியவில்லை. தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் 80 விழுக்காடு பணி இடங்கள் தமிழர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்காக தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.
குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 80 விழுக்காடு பணிகளும், ஆந்திரா, ராஜஸ்தானில் 75 விழுக்காடு பணிகளும், மத்தியப் பிரதேசத்தில் 70 விழுக்காடு பணிகளும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் சி மற்றும் டி பிரிவு பணிகளை முழுக்க முழுக்க உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கி சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலும் இத்தகைய சட்டம் இயற்றப்பட்டால் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு அதிக வேலை கிடைப்பது மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களின் அனைத்து நிலைப்பணியாளர்களும் தமிழ் மொழியில் பேசுவர் என்பதால் இத்தகைய மொழிச் சிக்கல்களும், அதனால் ஏற்படும் சர்ச்சைகளும் தடுக்கப்படும்.
வாக்குறுதியை நிறைவேற்றுமா திமுக?
பாமகவின் இந்த நிலைப்பாட்டை திமுகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதன்படி, திமுக ஆட்சிக்கு வந்தால்,‘தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க, சட்டம் கொண்டு வரப்படும்’ என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது.
அதை நிறைவேற்றுவதன் மூலம் இத்தகைய சிக்கல்களுக்கு தீர்வு காண முடியும். அதேபோல், 100 விழுக்காடு அரசு வேலைவாய்ப்புகளும் தமிழர்களுக்கே கிடைக்க வகை செய்ய வேண்டும்.
அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் உள்ள வங்கிகள் உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் அலுவலர்கள் நிலை தவிர்த்த பிற பணிகள் முழுக்க முழுக்க தமிழர்களுக்கே வழங்கப்படுவதும், மத்திய அரசு அலுவலகங்களில் இடை நிலைப் பணிகளில் 50 விழுக்காடு இடங்கள் தமிழர்களுக்கே வழங்கப்படுவது உறுதிசெய்யப்பட்டால் வங்கிகள், அஞ்சல் நிலையங்கள் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களில் தமிழர்கள் மொழி சார்ந்து அவமதிக்கப்படுவதற்கு முடிவு கட்டப்படும்.
அரசுப்பணியில் 100 விழுக்காடு
மேலும், தமிழர்களுக்கு மத்திய அரசு அலுவலகங்களில் அதிக வேலை கிடைப்பதும் உறுதி செய்யப்படும். இவைதான் தமிழர்களின் அனைத்து வகை நலன்களையும் காப்பதற்காக தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளாகும்.
எனவே, தமிழ்நாடு அரசு இனியும் தாமதிக்காமல் அரசு பணிகளில் 100 விழுக்காடும், தனியார் தொழில் மற்றும் சேவை வழங்கும் நிறுவனப் பணிகளில் 80 விழுக்காடும் தமிழர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
அதேபோல், மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கும்படி மத்திய அரசிடம் வலியுறுத்தி வெற்றி பெறவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: Exclusive: சொமெட்டோ சர்ச்சை - பாதிக்கப்பட்டவரின் வீடியோ பதிவு